மாநில உரிமைகளை காக்கும் குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்படுகிறது – டி.ராஜா பேட்டி

மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை ப்ரூக்பாண்ட் சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: எங்கள் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் வரும் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. அகில இந்திய மாநாடு இந்தாண்டு அக்டோபர் 14 முதல் 18 ம் தேதி வரை விஜயவாடாவில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் சூழல், மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை மதிப்பீடு செய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம் எனக் கூறினார்.

பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தகர்த்து வருகிறது என்றும், பிரதமர் பின்பற்றும் கொள்கைகள் நமது பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் கொள்கையாக உள்ளது என்றும் பேசினார்.

மேலும், ஆய்வு முடிவுகளின் படி பசி-பட்டியினியில் உள்ள 116 நாடுகளில் 101வது இடத்தில் இந்தியா உள்ளது என்பதை குறிப்பிட்டு பேசினார்

வங்கிகளை தனியாரிடம் ஒப்படைப்போம் என்றனர், இதனால் வங்கி ஊழியர்களும் போராட்டம் நடத்தினர். உழைக்கும் மக்கள் நாட்டின் சுயசார்பை காப்பாற்ற போராடுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ள நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. பாராளுமன்றம் செயல்படாத அவையாக உள்ளது. இதில் 12 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டாட்சி என்பதன் அரணாக உள்ள அவையே செயல்படாமல் உள்ளது. பாராளுமன்றம் முடக்கப்படுமானால் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம். ஆனால் பிரதமர் வருகையால் அரசியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஏற்கவில்லை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு குறித்து ஏற்கனவே நாங்கள் பேசி உள்ளோம். இந்திய கம்யூ., கட்சிதான் முதலில் வேண்டுகோள் விடுத்தது. கூட்டு முயற்சி எடுத்தால் தமிழகத்தில் வாக்கு வங்கி உயரும் எனத் தெரிவித்தார்.