கரூர் ஃபார்முலா கோவையில் வெல்லுமா?

2016 அக்டோபரில் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு அரசியல் மற்றும் சட்டப் போராட்டம் காரணமாக ஜெயலலிதா மறைவுக்குப்பின், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 டிசம்பரில் நடைபெற்றது.  இயல்பாகவே ஊரகத்தில் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் என்பதால் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி தனது பிம்பத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டு நகர்புறங்களுக்கு நீங்கலாக ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்.

அதில், எதிர்கட்சியாக இருந்த திமுக தனக்கு செல்வாக்கு குறைவான கிராமப்புற பகுதிகளில் அதிமுகவை விட கூடுதல் வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் ஸ்டாலினுக்கு மாற்று, தான் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் உணர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.  இதற்கிடையே, பேரவைத் தேர்தலுக்கு பிறகு,  விடுபட்டுபோன 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இப்போது நடந்து முடிந்தது. இதில் திமுக அமோக வெற்றிபெற்றது.

மொத்தமுள்ள 148 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களில் 2 உறுப்பினர்களை மட்டுமே அதிமுக பெற்றாலும், ஒன்றியக்குழு உறுப்பினர்களைப் பொறுத்தவரை 20 சதவீத இடங்களை அதிமுக பெற்று திமுகவுக்கு மாற்று அதிமுக தான் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டது. தங்களுக்கு செல்வாக்கு மிக்க 7 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோதும் தனித்து நின்ற பாமகவால் எந்த மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் இரண்டாவது இடத்துக்கு வர முடியவில்லை.

இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுக தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. அநேகமாக ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி தொடக்கத்திலோ இத்தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தல் போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை ருசிக்கக்கூடும். ஆனால், திமுகவுக்கு இன்னும் கொங்கு மண்டலத்தில் சவால் காத்திருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் நன்கு உணர்ந்திருக்கிறார்.

இதனால் தான், சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை, சேலம் மாவட்டங்களில் பெற்ற தோல்வியில் இருந்து மீள்வதற்கு பல்வேறு அரசியல் வியூகங்களை தொடர்ந்து செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு காரணம், கருணாநிதி போல கூட்டணி கட்சிகளை நம்பி அரசியல் செய்யாமல், திமுகவை சொந்த பலத்தில் கொங்கு மண்டலத்தில் வளர்க்க வேண்டும் என உறுதியாகவுள்ளார் ஸ்டாலின்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் திமுக எளிதாக வெற்றிக்கனியை ருசித்தாலும்,  கோவை, சேலம் மாநகராட்சிகளில் திமுகவுக்கு அதிமுக கடும் போட்டியை உருவாக்கக்கூடும்.  இதற்கு காரணம், கோவை வேலுமணியின் கோட்டையாகவும், சேலம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவும் இருந்து வருகிறது. இதற்கு நிகரான தளபதிகள் திமுகவில் இல்லை என்பதே உண்மை.

இதை உணர்ந்து தான், பொறுப்பு அமைச்சர்களாக சேலம் மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜியையும், கோவைக்கு, அர.சக்கரபாணியையும் நியமித்தார். இருப்பினும், களத்தில் அனுபவம் மிக்க செந்தில் பாலாஜியை கோவையிலும், சேலத்தில் கே.என்.நேருவையும் வைத்து அதிமுகவை எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை என்பதை உணர்ந்த ஸ்டாலின், செந்தில் பாலாஜியை கோவைக்கு நகர்த்தி அங்கு தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

கோவைக்குச் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜியும் 100 மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்ட கோவை மாநகராட்சியை எப்படியாவது திமுக கைப்பற்றியே தீர வேண்டும் என பல்வேறு உத்திகளை கையாண்டு தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மனுக்களை மக்களிடம் பெற்று அதற்கு தீர்வு காணுவது, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை அழைத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து கூட்டம் நடத்தியது என தொடர்ந்து உள்ளூர் திமுகவினரை அரசியல் களத்தில் பம்பரமாக சுழற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதற்கு காரணம், அதிமுகவில் சக்திவாய்ந்த முகமாக திகழும் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், மக்களிடம் பழகும் அணுகுமுறை,  கட்சி நிர்வாகிகளிடம் வேலை வாங்கும்  அணுகுமுறை,  வாக்குச்சாவடி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் வேலுமணிக்கு நிகர் வேலுமணி தான். இதன் காரணமாக தான் மாநிலம் முழுவதும் அதிமுக பின்னடைவை சந்தித்தபோதும் கோவை மாவட்டத்தில் மொத்தமாக 10 தொகுதிகளையும் அள்ளியது அதிமுக.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் கோட்டை விட்டால் மீண்டும் தனது பிம்பம் உடைபடக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை களம் இறக்கி எப்படியாவது திமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

திமுகவால் ஒரு இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போனதற்கு வேலுமணியின் தீவிர களப்பணியும், அரசியல் உத்திகளும் தான் காரணம்.

இதை இதுவரை உள்ளூர் திமுக பிரமுகர்களே உணரவில்லை, தொடர்ந்து மாநகராட்சி தேர்தலிலும் வேலுமணிக்கு உள்ளூர் திமுகவினால் ஈடுகொடுக்க முடியுமா என ஸ்டாலின் மனதில் எழுந்ததால் தான் வேலுமணிக்கு நிகராக களப்பணியாற்றக் கூடிய வல்லமை படைத்த செந்தில் பாலாஜியை ஸ்டாலின் களம் இறக்கியுள்ளார். ஸ்டாலினின் எண்ண ஓட்டத்தை நன்கு புரிந்துகொண்ட செந்தில் பாலாஜியும், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் திமுகவை வெற்றிபெற செய்வதற்கான உத்திகளை கையாண்டு வருகிறார்.

இயல்பாகவே, 1957 முதல் திமுக வலு குறைந்த பகுதியாகவே கோவை இருந்து வருவது செந்தில்பாலாஜிக்கு கடும் சவால்தான். 1996 பேரவைத் தேர்தலை தவிர்த்து மீதமுள்ள அனைத்து பேரவைத் தேர்தல்களிலும் திமுக இப்பகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளது.  2006 உள்ளாட்சித்தேர்தலில் கூட கோவை மாநகராட்சியில் அதிமுக பலத்துடன் கூடிய எதிர்கட்சியாகவே இருந்தது. 2006 பேரவைத் தேர்தலில் திமுக ஆளும் கட்சியாக வந்தபோதும், மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றிபெற முடிந்தது. 2011 பேரவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணியால் திமுக காணாமல் போனது.  2016 பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டுமே திமுக வெற்றிபெற்றது.

இந்நிலையில் தான், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் கோட்டை விட்டால் மீண்டும் தனது  பிம்பம் உடைபடக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த ஸ்டாலின், செந்தில் பாலாஜியை களம் இறக்கி எப்படியாவது திமுகவுக்கு சாதக சூழலை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார். செந்தில்பாலாஜியும் பழைய திமுக நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை கொண்டு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரக் களப்பணியாற்றி வருகிறார். அதற்கு உதயநிதி ஸ்டாலினையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். கோவையில் உள்ள கள நிலவரத்தை ஆழமாக புரிந்துகொண்ட உதயநிதியும்,  மாதம் 10 நாள்கள் கோவையில் தங்கியிருந்து களப்பணியாற்ற தயார் என அறிவித்துள்ளார். மேலும், வேலுமணியை குறிவைத்து பேசினால் தான் திமுக தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும், மேலும், மக்கள் மனதில் இருக்கும் வேலுமணியின் மதிப்புமிக்க பிம்பத்தை உடைத்தால் மட்டுமே திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதால் வேலுமணியை குறிவைத்து தொடர்ந்து அரசியல் ரீதியாக விமர்சனம் செய்து வருகிறார். இயல்பாகவே கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தேசிய, ஆன்மிக உணர்வு மிக்க வாக்காளர்கள் அதிகம். பிறமொழி பேசும் (மலையாளம், கன்னடம்) சமூக வாக்காளர்கள் எண்ணிக்கையும் இங்கு குவிந்து கிடக்கிறது.

மாநில சுயாட்சி,  தமிழ் பற்று போன்றவற்றை பிரதானமாக திமுக கொண்டிருப்பதால் இம்மாவட்ட வாக்காளர்களிடம் இயல்பாகவே திமுக பின்தங்கிவிடுவது, வழக்கமாகவே பல தேர்தல் முடிவுகளில் காணலாம். 1998 குண்டு வெடிப்பு சம்பவத்திற்க்கு பிறகு  கோவை மாவட்ட அரசியலில் இந்துத்துவா உணர்வு மேலோங்கிவிட்டது.

இதை ஜெயலலிதா தனது நுட்பமான அறிவால் தனக்கு சாதகமாக்கி வைத்துக்கொண்டார். இதனால் திராவிட இயக்கக் கொள்கையை அழுத்தமாக பேசும் திமுகவால் இதுவரை அங்கு வெற்றியே பெற முடியாத சூழ்நிலை தான் இருந்து வருகிறது. இதை உணர்ந்து தான் அரசியல் களத்தை எந்த வகையில் தங்களுக்கு சாதகமாக மாற்ற முடியுமோ அந்த வகையில் மாற்றுவதற்கான முயற்சியில் செந்தில்பாலாஜி மூலம் திமுக இறங்கியுள்ளது. திமுகவின் இந்த முயற்சி கைகொடுக்குமா என்பதை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவு உணர்த்தும்.

எடப்பாடி கோட்டையில் திமுக நுழையுமா ?

கோவையைப் போலவே சேலம் மாவட்டமும் அதிமுகவின் கோட்டையாகவே வீரபாண்டி ஆறுமுகத்தின் காலத்துக்குப்பின் இருந்து வருகிறது. குறிப்பாக 2011 பேரவைத் தேர்தலில் வீரபாண்டியார் எதிர்ப்பு உச்சத்தை தொட்டது. அதை நேரடியாகவே ஜெயலலிதா அறுவடை செய்தார். அதன் பிறகு, அதிமுக பலம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  2016 பேரவைத் தேர்தலில் கூட சேலம் வடக்கு தவிர பிற அனைத்து தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியது. 2021 பேரவைத் தேர்தலிலும் அதேநிலை தான் தொடர்ந்தது.

சேலத்தில் வன்னியர் சமூகம் பெரும்பான்மையாகவும்,  எடப்பாடி பழனிசாமியின் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகம் சிறிய எண்ணிக்கை சமூகமாகவே இருந்து வருகிறது.  இருப்பினும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி கொடுத்ததன் மூலம் சேலத்தில் இருக்கும் பெரும்பான்மை வன்னியர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டார்.  2019 மக்களவைத் தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பேரவைத் தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்ற அதிமுக,  2021 பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிற்கும்போது அது 94,000 வாக்குகளை அதிகம் பெற்றது. இதற்கு காரணம் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தான்.

பாமக கூட்டணியை விட்டு வெளியேறிய பின்னர் வன்னியர் வாக்குகளை அதிமுக தக்கவைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வன்னியர் வாக்குகளை பாமக மட்டுமே அறுவடை செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் அண்மையில் நடந்த பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணி தர்மத்தை அதிமுக மீறிவிட்டது, இதனால் தான் பாமக தோல்வி அடைந்தது என ராமதாஸ் விமர்சனம் செய்தார்.

தனக்கு சாதகமாக விழுந்த வன்னியர் வாக்குகளை ராமதாஸ் தந்திரமாக பிரிக்க முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி,  ராமதாஸ் அடிக்கடி அணி மாறுபவர் என விமர்சனம் செய்துள்ளார். இதன் மூலம் வன்னியர் வாக்குகளை அதிமுகவே தக்கவைக்க முடியும் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறார்.

வன்னியர் வாக்குகள் பாமகவுக்கோ அல்லது திமுகவுக்கோ நகர்ந்தால் அது திமுகவுக்கு மிகப்பெரிய சாதகமாக மாறிவிடும், மேலும் சேலம் மாகராட்சியை திமுக எளிதாக கைப்பற்றிவிடக்கூடும், அதை எப்படியாவது  தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும் இறங்கியுள்ளார். சேலம் மாநகராட்சியை யார் கைப்பற்றப் போவது என்பதை வன்னியர் வாக்குகளே முடிவு செய்யும். வேலுமணி, எடப்பாடி பழனிசாமி கோட்டையை திமுக கைப்பற்றுமா என்பது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

யார் இந்த செந்தில் பாலாஜி?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, கரூர் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த திமுக மாவட்டச் செயலாளராக கே.சி.பழனிச்சாமி இருந்தபோதே அவரை இழுத்து அரசியல் செய்தவர் செந்தில்பாலாஜி. 2006 ஆம் ஆண்டு அதிமுக தோற்ற போதிலும் அரவக்குறிச்சியில் வெற்றி பெற்றார். அதிமுகவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகாலம் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்  செந்தில் பாலாஜி. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியில் எளிதாக நின்று வெற்றி பெறாமல் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கரூரில் போட்டியிட்டு மிகக் கடினமான சூழலில் கரூர் மாவட்டத்தில் 4/4 இடங்களில் திமுகவை வெற்றி பெறச் செய்தார்.

செந்தில் பாலாஜி கரூரில் போட்டியிடவில்லை என்றால் நிச்சயம் எம். ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றிருப்பார். இதன்மூலம் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதியாக மாறியுள்ளார் செந்தில்பாலாஜி. அதனால் தான் மிகப்பெரிய அமைச்சரவையான மின்சாரத் துறையை ஒப்படைத்துள்ளார் ஸ்டாலின். கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியடைந்தது ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதோடு குறிப்பாக கோவையில் 10/10 இடங்களிலும் திமுக தோல்வியுற்றது  மன வருத்தத்தைக் கொடுத்துள்ளது.

கோவையில் அதிமுக வெற்றி பெற எஸ்.பி.வேலுமணி முக்கிய காரணம். அவருக்கு நிகராக கள அரசியல் செய்வதற்கு செந்தில் பாலாஜியால் தான் முடியும் என்பதற்காக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக  நியமித்துள்ளார் ஸ்டாலின்.