அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரிடம் புகார்

கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள மேற்கு மண்டல தலைவர் சுதாகரை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடத்த முயன்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள், எஸ்பி வேலுமணி, பிஆர்ஜி அருண்குமார், கே.ஆர் ஜெயராமன், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து பந்தயசாலை பகுதியில், உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரை சந்தித்து மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து ஐஜி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொண்டாமுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்பி வேலுமணி கூறுகையில், “பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு கோதவாடியில், 250 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இக்குளத்திற்கு நீர் ஆதாரமாக பி.ஏ.பி.பாசன திட்டத்தின் கிழ் தண்ணீர் நிரப்படும். கடந்த 43 ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் முழுமையாக நிரப்படாமல், கடந்த அதிமுக ஆட்சியில் குளம் துார் வாரப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் முழுமையாக நீர் நிரப்பட்டுள்ளது.

இந்த குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரப்பட்டுள்ளதால், கோதவாடி கிராம மக்கள் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக அக்குளத்தின் கரையோரமாக உள்ள ஏரி காளியம்மனுக்கு பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளனார்.

தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த 21ம்தேதி அன்று குளத்தை பார்வையிட்டு மலர் துாவி, கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது திமுகவை சேர்ந்தவர்கள் அநாகரிகமாக பேசியுள்ளனர்.

ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை தன்னுடைய செந்த தொகுதிக்குள், செயல்பட கூடாது என்பது இயற்கை நியதிகளுக்கு முரணாக உள்ளது, கோவையில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்க நினைப்பது சட்டவிரோதமானது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரை சந்தித்து மனு அளித்துள்ளோம்” எனக் கூறினார்.