ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நிறைவு

சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய, ‘நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான 7 நாள் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்’ நிறைவு பெற்றது.

இம்முகாமில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 26 பல்கலைக்கழகங்கள், 72 கல்லூரிகளில் படிக்கும் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராணயசுவாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றார்.

கோவை மாநகரக் காவல் ஆணையர் பிரதீப்குமார் ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: ஒவ்வொருவருக்கும் மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் 12 மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றது பாராட்டத்தக்கது. இக்கல்லூரியானது கோவை மட்டுமின்றி, தமிழகத்திலும் சிறந்த கல்லூரியாக விளங்குகிறது.

நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது பல்வேறு சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், சாலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வேண்டும். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனப் பேசினார்.

சென்னை நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரக மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா பேசும்போது, “நாட்டு நலப்பணித்திட்டத்தின் இலக்கே சமுதாயப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். நாட்டு நலப்பணித்திட்ட தேசிய ஒருமைப்பாட்டு முகாம் முதன் முதலாக கோவையில் நடைபெறுகிறது. இம்முகாம் இளம் மனதில் தன்னார்வச் சேவையை இளம் மனதில் விதைத்துள்ளது. யோகாசனம், உடற்பயிற்சி, பெண்கள் மேம்பாடு, குழு விவாதங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் என ஒற்றுமையைப் போற்றும் பலவித நிகழ்ச்சிகள் இம்முகாமில் இடம் பெற்றன” என்றார்.

தேசிய ஒருமைப்பாட்டு முகாமைச் சிறப்பாக நடத்தியதற்காக, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு, சென்னை நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரக மண்டல இயக்குநர் பாராட்டுச் சான்று வழங்கினார். இதேபோல் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், நாகராஜன், சுபாஷினி, தீபக்குமார், கீர்த்திவாசன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.