6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – அதர் பூனவல்லா

இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய இருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் சிஇஓ அதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

சிஐஐ என்ற மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், குழந்தைகளுக்கான ‘கோவோவாக்ஸ்’ தடுப்பூசி சோதனையில் இருப்பதாகவும், இது பாதுகாப்பை தர கூடியது என்றும் கூறினார்.

குழந்தைகளில் இதுவரை கடுமையான நோய்களை நாங்கள் பார்த்ததில்லை எனவும் இருப்பினும், ஆறு மாதங்களில், மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவோம் என்று பூனவல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஏற்கனவே இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் தடுப்பூசிக்கு உரிமம் பெற்றுள்ளதாகவும், அவற்றின் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசியால் எந்த விளைவுகளும் ஏற்படாது. இவை பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன் மிக்கவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்த பின் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுங்கள் என அறியுறுத்தியுள்ளார்.

இந்த தடுப்பூசிகள் தரமிக்கது மற்றும் நோய்க்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாக்கும் என்பதற்கு போதுமான தரவு உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.

மேலும், ஓமிக்ரான் குழந்தைகளுக்கும் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை எனக் கூறிய அவர் ஓமிக்ரான் வைரஸினால் எது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியவில்லை என கூறினார்.

குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. பாதிப்படைந்தாலும் அவர்களின் செல்கள் மற்றும் நுரையீரல்கள் விரைவில் குணமடைந்து விடுகின்றன என தெரிவித்தார்.