தேசிய ஒருமைப்பாட்டு முகாம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொடங்கியது

இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சென்னை மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநரகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும், ‘நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம்’, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கியது. இம்முகாம் வரும் டிச. 20-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராணயசுவாமி தலைமை வகித்து பேசும்போது, ‘நம்முடைய நாட்டின் வளர்ச்சியில் இளைய சமுதாயத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. நம்முடைய கல்லூரிக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நாம் பங்களிக்க வேண்டும். கோவை ஜவுளித்துறையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. கோவை மாவட்டத்தின் சிறப்பை, பெருமையை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கான சின்னம் மற்றும் முகாம் கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ், முகாமைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, “நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதியின் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததே. இம்முகாமில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பண்பாடு, கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் பங்கேற்றுள்ளனர். கோவை தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நகரமாகும். தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், கல்வியாளர்கள் இங்கு உருவாகி வருகின்றனர். இத்தகைய பெருமைப் பெற்ற நம்முடைய கோவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று இருப்பது பெருமையளிப்பதாகும்” எனக் கூறினார்.

பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.