சர்வதேச மனித உரிமை தினம்

“இந்திய கலாச்சார நெறிமுறைகளில் நீதியே முதன்மையானது”

சர்வதேச மனித உரிமை தின  22வது சிறப்புக் கூட்டம் கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை நீதிமன்ற சி.பி.ஏ (CBA) கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதியும், TNPID நீதிமன்ற சிறப்பு நீதிபதியுமான ஏ.எஸ்.ரவி கலந்து கொண்டார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஆற்றிய சிறப்புரையில், அரசு ஊழியர்கள் மனித உரிமைகள் தரத்தை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவில் நடைபெறும் பல்வேறு வகையான உரிமை மீறல்கள் குறித்து அவர் பட்டியலிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்: “வழக்கறிஞர்கள் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் நீதித்துறை போன்ற அரசு நிறுவனங்கள் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றுகிறார்களா என்பதை அவர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். மனித உரிமைகளின் சாராம்சம் நீதி ஆகும், இந்திய கலாச்சார நெறிமுறைகளில் நீதியே முதன்மையானது.

திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் தர்மத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றன. அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுகள் கூட, அரசன், சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டவன் என்று அறிவிக்கின்றன”, என்றார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி சிதைவது, தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் சேதப்படுத்தும் எனக் கூறினார்.

இந்நாளின் முக்கியத்துவத்தை வக்கீல் வி.பி.சாரதி தனது அறிமுக உரையில் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அருள்மொழி, செயலாளர் கலையரசன் மற்றும் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.