“இனி வரும் காலங்களில் கொரோனாவை விட மோசமான வைரஸ்கள் பரவும்”

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயண கட்டுபாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஒரு வைரஸ் (கொரோனா) நம்முடைய வாழ்வாதாரத்தையும் உயிரையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை விட மோசமான வைரஸ்கள் இனி வரும் காலங்களில் உலக நாடுகளை அச்சுறுத்தலாம் என்று டேம் சாரா கில்பெர்ட் கூறியுள்ளார். அந்த வைரஸ்கள் கொடியதாகவும் கொரோனாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளார். ஏற்கனவே நாம் பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான போதுமான நிதியும் இல்லை.

ஆனால் கொடிய வைரசால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு அதிக அளவில் நிதி வேண்டும். அதேசமயம் கொரோனா தடுப்பூசிகளும் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக குறைந்த செயல்திறனையே கொண்டிருக்கும். எனவே நாம் அனைவரும் கவனத்துடன் இருப்பதோடு இனிவரும் காலங்களில் பரவும் புதிய வைரசின் வீரியத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் டேம் சாரா கேட்டுக்கொண்டுள்ளார்.