ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட 4-வது அலகு தொடக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் 4-வது அலகு தொடக்க விழா மற்றும் முதலாமாண்டு நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டஅலுவலர் பிரகதீஸ்வரன் வரவேற்றார்.

பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: “உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய மாணவர்கள் எழுச்சி மிக்கவர்கள். அவர்களுடைய எண்ணங்களை அவ்வளவு எளிதாகப் பெற்று விடமுடியாது. ஆனால் நாட்டு நலப்பணித்திட்டம் என்ற இந்த அமைப்பின் மூலமாக அதை நிச்சயம் பெற்று விடமுடியும். அறியாமை, துன்பம், நோய் ஆகியவற்றில் இருந்து விடுபடச் செய்வது கல்வி. அதேபோல் நாட்டுப்பற்று, பிறருக்குத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை அளிப்பது இந்த நாட்டு நலப்பணித் திட்டமாகும்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா பேசியதாவது: “வாழ்க்கையில் எப்போதும் முன்னுக்குச் செல்லவேண்டும். பின்னுக்குச் செல்லக் கூடாது. நமக்கு எதுக்கு நாட்டு நலப்பணித்திட்டம்? என்றால் ஒருவருக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் இங்குதான் வளர்க்கப்படுகின்றன.

நாட்டு நலப்பணித் திட்டம் என்பது உலகத்தையோ, ஊரையோ திருத்துவது அல்ல. தன்னைத் திருத்திக் கொள்வதாகும். ஆளுமைத் திறனையும், தனித் திறமைகளையும், தலைமைப் பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும்.

ஒருநாள் வாழும் ஈசல் வெளிச்சத்தை நோக்கிச் செல்லும்போது, பல ஆண்டுகள் உயிர் வாழும் நாம் ஏன் வெளிச்சத்தை நோக்கிச் செல்லக்கூடாது. மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது. நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல, நானின்றி அமையாது உலகு என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுய முன்னேற்றமே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும். நாம் எப்போதும் விழிப்புணர்வுடையவர்களாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நம்முடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் 4-வது அலகு தொடங்கப்பட்டது. இதற்கான ஆணையை தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் அவர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.