தாய்ப்பால் சேகரிப்பில் தமிழக அளவில் கோவை அரசு மருத்துவமனை முன்னிலை – டீன் நிர்மலா தகவல்

தாய்ப்பால் சேகரிப்பில் கோவை அரசு மருத்துவமனை தமிழக அளவில் முன்னிலையில் இருப்பதாக மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், பிரசவம் ஆனவுடன் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குழந்தைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் தேவையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் பெற்று தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது.

இதற்காக அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி, தாய்ப்பால் சேகரிப்பில் தமிழக அளவில் முன்னிலையில் உள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் குழந்தைகள் நலப் பிரிவில் பல்வேறு சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன. எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் நலன் கருதி கொரோனா நோய்த் தொற்று காலத்திலும் தாய்ப்பால் தானம் பெறப்பட்டது.

கடந்த ஆண்டில் மட்டும் 450 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி தமிழகத்தில் உள்ள மற்ற தாய்ப்பால் வங்கிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், தாய்ப்பால் சேகரிப்பிலும் முன்னிலையில் உள்ளது எனத் தெரிவித்தார்.