பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை : புதிய கமிஷனர் பேட்டி

கோவை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவை மாநகர புதிய காவல் ஆணையர் பிரதீப்குமார் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதிலும் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் பிரபாகர் உத்தரவிட்டார். அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த தீபக் எம்.தாமோர், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோவை மாநகரின் காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவருக்கு போலீசார் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்த் அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை மிக முக்கிய நகரம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வித்தியாசமான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். சாலை விபத்துக்களை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பண மோசடி, வேலை வாங்கித்தருவதாக மோசடி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். கோவையை அமைதியாக வைக்க சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.