கோவையில் குளங்கள் நிரம்பியதால் சாலையில் ஓடிய வெள்ள நீர்

கோவையில் 20க்கும் மேற்பட்ட பெரிய குளங்களும், ஏராளமான ஏரி, குளம், குட்டைகளும் உள்ளன. இதில் பெரிய குளங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது நொய்யல் ஆறு.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளன. அதன்படி உக்கடம் வாலாங்குளம் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், குளத்தில் இருந்து நீர் வெளியெறி திருச்சி சாலை வழியாக ஆறு போல் ஓடி வருகிறது.

கோவையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழைப்பொழிவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே சாலைகள் மோசமடைந்து மழை நீர் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சூழலில், தற்போது ஏற்பட்டுள்ள சிறிய வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாலாங்குளம் இந்த ஆண்டு மிக வேகமாக நிரம்பியுள்ளது. உக்கடம் பெரியகுளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த குளத்தில் சேர்கிறது. உக்கடம் பெரிய குளத்தில் இருந்து வெளியேறும் நீரை தடுக்காமல் விட்டதால், வாலாங்குளம் மிக வேகமாக நிரம்பியது.

மேலும், வாலாங்குளத்தில் இருந்து சிங்காநல்லூர் குளத்திற்கு செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் தற்போது நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதுவரை நடைபெறாத நிகழ்வாக கோவை சாலைகளில் வெள்ளம் ஓடிவருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைந்தால், திருச்சி சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்தால் மக்களின் துயரை களைய முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.