கனமழை காரணமாக சிறுவாணி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சிறுவாணி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள வனப்பகுதியை ஒட்டி,அமைந்துள்ளது சிறுவாணி அணை. கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவு ஐம்பது அடியாக உள்ளது. இந்நிலையில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர் மட்டம், 45 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில் வரும் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்பை அடுத்து, அணையிலிருந்து, 30 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, சிறுவாணியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பதிவாகாத நிலையில், மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் பாதுகாப்பு கருதி, 30 செ.மீ., உயரத்துக்கு மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.