வாலாங்குளம் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்

கோவையில் வாலாங்குளம் நிரம்பியதால் ராமநாதபுரம் சுற்று வட்டாரப்பகுதிகளில் குளத்துநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள சூழலில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோவையைப் பொறுத்தவரை இங்குள்ள பெரும்பாலன குளங்கள் நூறு சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளன.
குறிப்பாக வாலாங்குளமானது முழுமையாக நிறைந்துள்ளது. இந்த சூழலில், உக்கடம் பைபாஸ் சாலை, திருச்சி சாலையை இணைக்கும் பகுதியில் குளம் நிரம்பி நீர் வெளியேறியது.

இந்த நீர், ஒலம்பஸ் மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே குளத்தில் மீன் பிடிக்க காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் சிலர் குளத்து நீரை கால்வாய் மூலமாக வெளியே அனுப்பினால் மீன்கள் வெளியேறும் என்று கூறி நீரை வெளியே அனுப்பாமல் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் குளம் நிறைந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே குளத்தை முழுமையாக தூர்வாரி ஆபத்திலிருந்து காக்க வேண்டுமென்று வாலாங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.