தமிழ்நாடு தினம்: எதிர்ப்பும், ஆதரவும்!

ஒரு ஆட்சியில் எல்லாமே சரியாக இருந்துவிட முடியாது. சில நேரங்களில் சில நடவடிக்கைகள், சில கொள்கை முடிவுகள் சமூகத்தின் ஒரு பகுதியைப் பாதிக்கும் என்றாலும், பொதுவான கொள்கை முடிவுகள் சமூகத்தின் மக்களுக்கு ஏற்ப திட்டங்கள், அறிவிப்புகள் செயல்படுத்துவது மக்கள் நல அரசுக்கு அழகாகும். அதை வைத்துதான் அந்த அரசாங்கம் மதிப்பிடப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கும் பெருமை சேர்கிறது. அந்த வகையில் தற்போது உள்ள தமிழக அரசு பெரிய குறை ஏதும் சொல்லும் அளவுக்கு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. சொல்லப்போனால் அதன் பல செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று ஸ்டாலின் முதலமைச்சரான போது அவருக்கு பல சவால்கள் காத்திருந்தன. அதில் முக்கியமாக மூன்று சவால்களைக் கூறலாம். ஒன்று கொரானா எனும் நோய்த் தொற்று நாட்டையே புரட்டி போட்டு கொண்டிருந்தது. ஆக்சிஜன் சிலிண்டர் தொடங்கி, மருத்துவ உபகரணங்கள் வரை தினம் தினம் மரணத்துடன் போராட்டமாக இருந்தது. அதை சரியான முறையில் எதிர்கொண்டு படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவந்தது பாராட்டத்தக்கது. அதுவும் அண்டை மாநிலமான கேரளா போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது சாதாரண விஷயமல்ல.

அடுத்தது, அதல பாதாளத்தில் இருந்த அரசாங்கத்தின் நிதி நிலைமை. ஒருபுறம் கஜானா காலி. இன்னொருபுறம் இரண்டு ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சி நடவடிக்கையும் இன்றி முடங்கி பொருளாதாரம் நலிவுற்றிருந்த மக்களிடம் பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. வேலைக்கு வெளியே போக முடியாது, ஆனால் செலவுக்கு பணம் தேவை என்ற நிலையில் அதனையும் படிப்படியாக சமாளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

மூன்றாவது தான் மிக முக்கியமானது. பொதுவாக தமிழக அரசின் செயல்பாடு எவ்வித குறையும் சொல்லதக்கதாக இல்லாமல், பொதுமக்களும் பெரும்பாலான எதிர்க்கட்சியினரும் பாராட்டத்தக்க வகையில் இருந்து வருகிறது. வெற்று வார்த்தைகள், மாநாடு, அறிவிப்புகள், சவால் என்று அரசியல் சார்ந்ததாக இல்லாமல், மக்கள் நலப் பணித் திட்டங்கள், செயல்பாடுகள் என்று ஆட்சி சார்ந்து முதல்வரும், அவரது அமைச்சரவையும், அதிகாரிகளும் இயங்குவது கண்கூடாகத் தெரிகிறது.

அதிகாரிகள் மட்டத்தில் அதிலும் கொள்வது கொண்டு தள்ளுவன தள்ளி என்பது போல திறமையான புதிய அதிகாரிகளை உதயச்சந்திரன், இறையன்பு, உமாநாத் அனுஜாஜ் போன்ற அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வந்திருப்பது, அதேநேரத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்ற திறமையான அதிகாரிகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதும் இன்றைய முதலமைச்சரின் புத்தி சாதுர்யத்தைக் காட்டுகிறது. சொல்லப் போனால் இதற்கு முன்பு இருந்த பெரிய தலைவர்களின் ஆட்சிக்கு சற்றும் குறையாமல் ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப இந்த அரசாங்கம் வெளிப்படையாக இயங்கி வருவதற்காக தமிழக அரசை பாராட்டத்தான் வேண்டும்.

இந்த நிலையில் ஜூலை 18 தமிழ்நாடு தினம் என்று அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. இதற்கு ஒருபுறம் வரவேற்பும் இன்னொரு புறம் எதிர்ப்புகளும் கிளம்புகின்றன. அரசியல் என்ற முறையில் இது சாதாரணமான ஒன்று. ஆனால் மக்கள் நல அரசு என்ற முறையில் அரசின் செயல்பாடுகளைச் செய்வதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் கவனச் சிதறலாக மாறிவிடக்கூடாது. புதிதாக ஒரு நாளை அரசாங்கத்தின் நாளாக அறிவிப்பது வேறு. ஏற்கனவே ஒரு முறை அரசு அறிவித்த நாளை மாற்றி அறிவிப்பது வேறு. அதற்கான காரணங்கள் சரியாக அமைய வேண்டும். அதுவும் பல முக்கிய பணிகளை செயல்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் மக்களிடம் நன்மதிப்பு பெருகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது அவசியமா என்று தோன்றுகிறது.

இப்போதுதான் பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்து விழா காலங்கள் தொடங்கியிருக்கின்றன. பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள், கண்காட்சிகள் என்று இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மூன்றாவது அலை உருவாகும் வாய்ப்பு உண்டா, வந்தால் எப்படி சமாளிப்பது என்ற நிலைதான் இன்னமும் உள்ளது. இன்னொரு புறம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதற்கு இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதற்காக பல தயாரிப்புகளை அரசாங்கம் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த ஜூலை 18 தமிழ்நாடு தினத்தை அறிவிப்பதற்கு இது சரியான நேரமல்ல என்றே தோன்றுகிறது. குறிப்பாக, அன்றைய மதராஸ் மாகாணம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று மொழிவாரி மாநிலங்களாக பிரிந்த நாளான நவம்பர் ஒன்றை மாநில நாள் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் தமிழரசு கழகத்தின் ம.பொ.சிவஞானம் உட்பட பலரும் நவம்பர் 1 நமது மாநில நாளாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்கள். ஏதோ ஒரு காரணத்தால் நாம் அதை செய்யவில்லை.

நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு தினமாக ஏற்கனவே இருந்த தமிழக மாநில அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது வேண்டாம், ஜூலை 18 என்று அறிவிப்பது பொதுமக்களின் பார்வையில் சரியாகப்படவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல. தேவையற்ற குழப்பம், திசை திருப்புதல் என்று ஸ்டாலின் உள்ளிட்டோர் கவனம் சிதறுவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது என்றே தோன்றுகிறது.

மக்கள் நலப் பணியில் மாநில அரசின் உரிமைகளை விட்டுத் தராமல் நடப்பது என்பது வேறு. இது போல ஒரு அவசரமான முடிவை எடுப்பது வேறு என்பதை உணர்ந்து செயல்படுவது மிகவும் நல்லது. ஒரு தவறான முன்னுதாரணத்தை செய்வதன் மூலம் இதுவரை செய்த மிகப்பெரிய நல்ல காரியங்கள், மக்கள் ஆதரவை பெறக்கூடிய காரியங்கள் எல்லாம் மாறி விடக்கூடாது என்பதே பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.