விமான நிலைய விரிவாக்கம்: கனவு பலித்தது!

கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது கோவை, திருப்பூர் பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கை. இதற்கு தேவையான இடம் இல்லாத நிலையில் அதற்கான இடத்தை கையகப்படுத்துவதற்கு பெரும் எதிர்ப்புகளும், சிக்கல்களும் இருந்து வந்தன. இன்னொருபுறம் எப்படி இழப்பீட்டுத் தொகை வழங்குவது என்றும் அதற்கான நிதியாதாரத்தை ஒதுக்கும் நிலையில் மாநில அரசு இல்லை என்றும் பல்வேறு காரணங்களால் இந்த கோவை விமான நிலைய விரிவாக்கம் என்பது தள்ளிக்கொண்டே போனது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விமான நிலைய விரிவாக்கத்துக்கான இடத்தை சட்டச் சிக்கல்களைத் தாண்டி கையகப்படுத்துவது மாநில அரசின் பணி என்றால், விமான நிலைய விரிவாக்கம், தரம் உயர்த்துதல் என்பது மத்திய அரசின் பணி என்று தொடர் செயல்பாடு தேவைப்படும் திட்டம் இது. இந்த நிலையில் தான் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக மாநில அரசு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கி இருக்கிறது என்ற செய்தி வந்து இப்பகுதி தொழில் வணிகத்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் பெரும் மகிழ்ச்சி அலையை உருவாக்கி இருக்கிறது. ஏன் இந்த மகிழ்ச்சி அலை?

தற்போது கோவைக்கு வரும் வெளிநாட்டினர் சென்னை, பெங்களூர் அல்லது கொச்சி என்று வந்து இறங்க வேண்டும். பிறகு அங்கிருந்து கோவை வரவேண்டும். இந்த வகையில் வரப்போக ஒவ்வொரு நாள் என்று இரண்டு நாட்கள் பயணத்தில் கழியும். இதனைப் பலரும் விரும்புவதில்லை. அதைப்போலவே கோவை, திருப்பூர் ஆகிய தொழில் நகரங்களில் இருந்து வெளிநாடு செல்லும் தொழில் வணிகத்துறையினர் வழக்கம் போல சென்னை, பெங்களூர், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.

இப்போது உள்ள கோவை விமான நிலையத்துக்கே ஏன் சர்வதேச விமானங்கள் வரக்கூடாது, சேவை வழங்கக்கூடாது என்றால் கோவை விமான நிலையம் சர்வதேசப் போக்குவரத்தை நடத்த ஏதுவானதாக இல்லை என்பதுதான் நேர்மையான பதில். இங்கிருக்கும் விமான ஓடுதளம் 9500 அடி உள்ளது. இது 12500 அடி நீளமாக அதிகரிக்கப்பட வேண்டும். அது போக சர்வதேச விமான நிலையத்துக்கான பிற வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

இவ்வாறு செய்து தரப்படுவதால் இப்பகுதியில் உள்ள ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என்று பல துறைத் தொழில்களும் செழித்து வளரும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்றுமதி வாய்ப்புகள் கணிசமாக உயரும். இப்போது வீணாகும் நேரத்தையும், பொருட்செலவையும் உற்பத்திக்கு பயன்படுத்தலாம். பொருளாதாரம் உயரும் போது இங்கு நிதி முதலீடும் அதிகரிக்கும். தொழில் வளரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

திருப்பூர் போன்ற நகரங்கள் ஏற்றுமதி செய்து கிடைக்கும் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் என்பது இன்னும் பல மடங்கு உயரும். அந்நியச் செலாவணி பெருகும். உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்வணிகமும் பெருகும். கிட்டத்தட்ட இது ஒரு இருபதாண்டு கனவு என்றே சொல்லலாம்.

இவ்வளவு நாளாக விமான நிலைய விரிவாக்க நிலத்துக்கான இழப்பீடு தொகை வழங்குதில், நில மதிப்பீடு செய்வதில் சிக்கல், அதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் உள்ள சிக்கல் என்று பத்தாண்டுகள் தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தொலைநோக்குடன் துணிச்சலாக 1132 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் கண்டிப்பாக இப்பகுதியில் தொழில்வணிகம் அடுத்த கட்டத்துக்கு உயரும். தமிழகம் தனது தொழில் வளம் மிக்க மாநிலம் என்ற பெயரை தக்கவைக்க முடியும். அந்த வகையில் இப்பகுதியில் உள்ள அனைத்து தொழில் வணிக அமைப்புகளும் இந்த அரசாணையை வரவேற்று இருக்கின்றன.

கொங்கு நாட்டில் திமுக தோற்று விட்டது என்பதற்காக அப்பகுதி புறக்கணிக்கப்படுமா என்ற ஒரு கேள்வி அன்று ஸ்டாலினிடம் வைக்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதில்; கொங்கு நாட்டு மக்கள் ஏன் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று நாணும் அளவுக்கு அங்கு நன்மைகள் செய்வோம், மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இன்று அது உண்மையாகி இருக்கிறது.

தமிழக அரசுக்கு உள்ள நிதி நெருக்கடிக்கு இடையில் இப்பகுதி மக்களின் வெகுநாள் கனவான கோவை விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கு நிதி ஒதுக்கி இருப்பது பலவகையிலும் பலனளிக்கக் கூடியது, பாராட்டுக்கும் உரியது.