கட்டுமானமும் சமூக அக்கறையும்!

சிறப்பான 10 ஆண்டுகளைக் கடந்து 11 ஆம் அகவையில் சிபாகா

பத்து ஆண்டுகளுக்கு முன் கோவை பகுதியில் உள்ள கட்டுமானத் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சிசனைகளுக்குத் தீர்வு காண முதன்மையாக உருவாக்கப்பட்ட ஒரு சங்கம் தான் சிபாகா எனும் கோவை பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம்.

என்னதான் தன்னுடைய துறை சார்ந்த நூற்றுக்கும் அதிகமான பில்டர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொறியாளர்களின் நலனுக்காக அறிவுப் பகிர்வு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகளை நடத்துவதை முக்கியமாக கொண்டாலும் சமூகம் சார்ந்த அறப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதில் சிபாகா தவறியதில்லை. இந்த பேரிடர் காலத்திலும் சங்கத்தின் தற்போதைய தலைவர் பழனிசாமியின் வழிகாட்டுதலில் இதன் அறப்பணிகள் தொடர்ந்துள்ளன என்பதை அறிய அண்மையில் நடந்த ’சிபாகா தினம் 2021’-ல் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

அப்படி என்ன சேவைகளை இந்த ஆண்டு செய்துள்ளது சிபாகா?

இதுவரை நம் கோவையின் நலனுக்காக 6000க்கும் அதிகமான மரங்களை நட்டு அதை பராமரித்துவரும் இந்த சங்கம் இந்த ஆண்டு சுமார் 300 மரக்கன்றுகளை நட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அதில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துவருகிறது.

ஏப்ரல் 2021 என்பது கொரோனாவின் இரண்டாம் அலை தலை தூக்கிய காலம். அப்போது ஏழை மக்கள் அதிகம் அணுகிய கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் வருகை அதிகரித்தபடி இருந்தது. மருத்துவமனையின் டீன் டாக்டர்.நிர்மலா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அங்கு வரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்திட மூன்று மாதங்களுக்கு 18 பாதுகாப்புப் பணியாளர்களை சிபாகா நியமனம் செய்து, அவர்களுக்கான சம்பளத்தையும் (மொத்தம் ரூ. 8 லட்சம்) அந்த 3 மாத காலத்திற்கு ஏற்றது.

சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான தரம் வாய்ந்த பிளம்பிங் ஆய்வகத்தை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா தொழிற்பயிற்சி நிறுவனத்தில் அமைத்துக் கொடுத்துள்ளது. குடும்பச் சூழ்நிலையால் பள்ளிப் படிப்பினை பாதியில் தவறவிட்ட மாணவர்களுக்கும் இந்த மையம் மூலம் பிளம்பிங் பயிற்சி வழங்கப்படும்.

கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு கூடாரம் ஆதரவாளர் உதவியோடு அமைக்கப்பட்டது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சார்ந்த 400 பொறியியல் மாணவர்களுக்குக் கட்டுமானத் துறை சம்பந்தமான தொழில்-வழிகாட்டல் நிகழ்வு நடத்தப்பட்டது. சிபாகா உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் மொத்தம் 300 நபர்களுக்கு இந்த சங்கம் சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும் இந்த சங்கத்தின் செயலர் சகாயராஜ் தெரிவித்தார்.

பெருந்தொற்று காலமாக இருப்பதால் இது மாதிரியான சேவைகளை அதிகமாக செய்ய வாய்ப்புகள் குறைந்தாலும், செய்ததை சிறப்பாகச் செய்துள்ளது சிபாகா என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

சிபாகா தினத்தில் சிலம்பத்திற்கு வந்தனம்:

அக்டோபர் 11, 2011 என்பது சிபாகா தன் முதல் மூச்சை சுவாசித்த நாள். ஒவ்வொரு ஆண்டுவிழாவின் போதும் கடந்த ஓர் ஆண்டில் இந்த சங்கம் செய்த நற்காரியங்களை நினைவுகூர்வதோடு, ஆண்டுதோறும் பல சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கௌரவப்படுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டில் சிலம்பம் மற்றும் யோகாவில் பயிற்சி பெற்று, பதக்கங்கள் பல வென்று, வங்கியில் பணி கிடைத்தும் அதை விட சிலம்பத்தின் மீது கொண்ட ஆர்வத்தையும், இந்த பாரம்பரியக் கலையை இளைய சமுதாயத்திடம் கொண்டுசேர்க்க விரும்பி, அந்த வேலையை விட்டு விலகி தனி சிலம்பப் பயிற்சி பள்ளியை நடத்திவரும் இரு இளைஞர்களான வெங்கடேஷ் மற்றும் வினோத் ஆகியோருக்கு இந்தாண்டு சிபாகாவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவின் தலைவர் சப்தரிஷி இவர்களை வாழ்த்திப் பேசினார், விழாவின் சிறப்பு விருந்தினரான ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மனித வளத்துறை இயக்குனர் கவிதாசன், மற்றும் கவுரவ விருந்தினர் லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ். முத்துராமன் பாராட்டுச் சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கினர்.

சவால்களை வாய்ப்புகளாக பாருங்க!

எஸ்.முத்துராமன், நிர்வாக இயக்குனர், லட்சுமி செராமிக்ஸ்.

சவால்கள் நம்மை சூழும்போது தான் நம் தன்மையும், தனித்திறமையும் வெளிப்படும். நாங்கள் எங்கள் லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தை அடுத்த 10 ஆண்டுகள் முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லக்கூடிய மாற்றங்களை இந்த சவால்கள் நிறைந்த பெருந்தொற்று காலத்தில் தான் செய்தோம். இந்த பேரிடர் காலத்தைப் பார்த்து அஞ்சவேண்டாம். அமோகமான காலம் உங்கள் கட்டுமானத்துறைக்கு வரப்போகிறது என்று பேசினார்.

இத்தனை நாட்களாய் எந்த நிறுவனமும் விரிவாக்கம் ஏதும் செய்யவில்லை, மாறாக அவர்களுக்கு இருந்துவரும் கடன்களை குறைத்துக் கொண்டு வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் பெரும் நிறுவனங்கள், கார்ப்ரேட்டுகள் விரிவாக்கத்திற்கு செல்வார்கள், அப்போது உங்கள் துறை சார்ந்தோருக்கு அமோக வாய்ப்பு தேடி வரும்.

அப்படி ஒரு நல்ல காலம் உங்கள் துறைக்கு வரவிருக்கிறது. இப்போதே பல நகரங்களிலும், கிராமப்பகுதிகளிலும் கட்டுமானப்பணிகள் முழுமூச்சுடன், முழு தொழிலாளர்களுடன் நடைபெற்றுவருவதை காணமுடிகிறது. நல்ல காலம் வரும்போது, அனைத்து நிறுவனங்களிலும் நிர்வாக ஒழுக்கம் என்பது அதிக அளவில் இருக்கவேண்டும். தொழிலை நடத்துபவர்கள் தங்கள் நிறுவன ஊழியர்களிடம் இந்த ஒழுக்கம் சேர்ந்திட முயல வேண்டும். நிதியை நல்ல முறையில் கையாள வேண்டும், அதிலும் ஒழுக்கம் வேண்டும். உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பத்தை உபயோகியுங்கள்.

நிறுவனத்தின் பொறுப்பு, உரிமையாளர்களான உங்கள் மீது இருக்கும். ஆனால் அதேவேளையில் எந்த ஒரு தனி நபரை நம்பியும் ஒரு நிறுவனம் இருக்கக் கூடாது என்பதில் தெளிவுடன் இருங்கள். உங்கள் நிறுவனம் இயங்கும் முறைமீது கவனம் வையுங்கள். நீங்கள் முழு மனத்திருப்தியுடன் எல்லாப் பணிகளை எதிர்வரும் காலங்களில் செய்யுங்கள், அனைவரையும் திருப்தி செய்ய முடியாது என்பதையும் மனதில் வையுங்கள்.

வாடிக்கையாளர்களின் வெற்றியே, வியாபாரியின் வெற்றி !

கவிதாசன், இயக்குனர் ஹெச்.ஆர். ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் உடல் நலம், பணம் மற்றும் நேரம் ஆகிய மூன்றும் தேவை. ஒரு ஆய்வு சொல்கிறது மகிழ்ச்சி என்பது 10% பணத்தாலும், 30% குடும்பத்தாலும் கிடைக்கிறது. மீதம் 60% அவரவர் செய்யும் பணியில் தான் உள்ளது. எனவே செய்வதை மிகச் சிறப்பாக செய்யும் நபராக இருக்கவேண்டுமெனில் முதலில் வீட்டில் மகிழ்ச்சியான நபராக இருக்கவேண்டும், என்று பேசினார்.

குடும்பத்தினரை, குறிப்பாக தங்கள் துணையை பாராட்டத் தெரிந்தவர்களாகவும், விட்டுக்கொடுத்து வாழ்க்கையை நடத்தத் தெரிந்தவர்களாகவும் இருக்கவேண்டும். சிறு குறைகளை பெரிதாகாமல், அங்கேயே அதை விட்டுச்செல்ல தெரிந்தவர்களாக இருந்தால் அது நிச்சயம் வேலையிலும் நன்மை பயக்கும்.வியாபாரத்தில் வெற்றிபெற வேண்டுமெனில், உங்கள் வாடிக்கையாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவர்களின் நம்பிக்கைக்கு உரியதாய் உங்கள் நிறுவனம் இருக்கவேண்டும். அது ஒரு நாளில் கிடைக்கக் கூடியது அல்ல. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எது என்று தெரிந்து கொண்டு அதை வழங்க வேண்டும்.

ஒரு வியாபாரி தனக்கு வழங்கும் பொருளோ சேவையோ உலகத் தரம் கொண்டதாக இருக்கவேண்டும், அதே சமயம் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் மற்றும் அது உடனே டெலிவரி செய்திடவேண்டும் என்று தான் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது போல் அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் அவர்களின் நம்பிக்கையை நாம்அடையலாம், நம் தொழிலும் வெல்லலாம். உங்கள் நிறுவனத்திற்கு நன்மதிப்பு கிடைத்தாலும், அது ஒற்றை நபரை நம்பியதாக இருக்காமல் ஒரு நல்ல ஒழுங்குமுறையை பின்பற்றுவதாக இருக்கவேண்டும்.

ஒரு நிறுவனருக்கு உயிராகவும், உணர்வாகவும் இருக்கும் தொழில், இரண்டாம் தலைமுறையினருக்கு அது வேலையாகவும், மூன்றாம் தலைமுறையினருக்கு பொழுதுபோக்காகவும் ஆகிவிடுகிறது. ஆனால் அதற்கு பின் வரும் தலைமுறையினருக்கு ஒரு எரிச்சலாகி விடுகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

எனவே அடுத்த தலைமுறைக்கும் நம் தொழில் சென்று சேரவேண்டும், அவர்களுக்கும் அது உயிராக இருக்கவேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை அவர்களுக்கு வழங்க முந்தைய தலைமுறையினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.