அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காரமடை பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காரமடை புத்தர் நகர் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

காரமடை பேரூராட்சிக்கு உட்பட்ட புத்தர் நகர் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இங்கு வசிக்கும் அனைவரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

எங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. பாம்பு, தேள், பூரான் போன்ற உயிரைக் கொள்ளக்கூடிய விஷப்பூச்சிகள் அதிக அளவில் இங்கு வருகின்றன. தினமும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து பாம்பை பிடித்துச் செல்ல கூறி வருகிறோம். குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.