தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பாராட்டு விழா

கோவாவில் நடைபெற உள்ள தேசிய சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள செல்லும் கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து இதில் 860 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கோவையை சேர்ந்த 28 பேர் தேர்வு செய்யப்பட்டு வரும் 8,9,10 தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் தேசிய அளவில் கலந்து கொள்ள உள்ள வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை மாவட்ட தலைமை உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பாராட்டு விழா கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைமை உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் இருகூர் உதய் பூபதி செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இதில் உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டு வீர்ர், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் தமிழக அரசு தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலையை ஊக்குவித்து வருவதாகவும், கோவையிலிருந்து செல்லும் சிலம்ப விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் வெற்றி பெற்று சர்வதேச அளவில் சாதனைகள் புரிய தமது வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார். முன்னதாக கோவாவில் சிலம்பம் விளையாட செல்ல உள்ள வீர்ர்கள் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பத்தை லாவமாக சுற்றி அசத்தினர்.

தொடர்ந்து விழாவில் அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் சிலம்பம் பயிற்சியாளர்கள் ப்ரவீன், செந்தில், குமார், மாரிமுத்து உட்பட நற்பணி மன்ற மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.