“கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது” – அமைச்சர் பேட்டி

கோவை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கொங்கு கிலோபல் போரம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொழில்துறை ஆலோசனை கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் (25.09.2021) நடைபெற்றது.

இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழில் துறையினர் சந்திக்கும் சவால்கள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு தொழில் துறை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக தொழில்துறைக்கான சாலை விரிவாக்கம் நெடுஞ்சாலை கட்டமைப்பு மற்றும் கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தனிமனித பொருளாதாரம் கிராமப்புற மற்றும் நகர வளர்ச்சிக்கு சாலைகள் முக்கிய பங்காற்றுபவை எனவும் கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதிக்கு சாலை கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பவை எனவும் தெரிவித்தார்.

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் தொழில் வளர்ச்சி பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகமாகும் எனவும் தமிழகத்தின் மேற்கு பகுதிக்கான வளர்ச்சிக்கு தமிழக அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பல்லடம் முதல் கொச்சி வரையிலான சாலையை அகலப்படுத்தபடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லடம் சித்தூர் இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை முதல் கரூர் வரை நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன ரூ.3140 கோடி மதிப்பீட்டில் 2004ம் ஆண்டுக்கு முன்பு இப்பணிகள் நிறைவு பெறும் எனவும் தெரிவித்தார்.

இவை மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் முக்கிய பகுதிகளில் இறங்கு தளம் அமைப்பதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் முக்கிய மேம்பாலங்களில் இறங்கு தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் இக்கூட்டத்தின் மூலமாக தொழில்துறையினர் அளித்துள்ள கோரிக்கைகள் முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு, கோவையின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி உறுதுணையாக இருக்கும் எனவும் கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு ஆயிரத்து 132 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதார் எனவும் தெரிவித்தார். நாளை மறுதினம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும் எனவும், 600 ஏக்கர் நிலம் விமானநிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கோவை அவினாசி சாலையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர், கொங்கு மண்டல வளர்ச்சி என்பது தனிப்பட்ட வளர்ச்சி அல்ல எனவும் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி என தெரிவித்தார்.