திறன்மிகு தொழிலாளரே: இன்றைய தேவை

தினந்தோறும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையிலும் தமிழக அரசு பல வகையிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதைப் பாராட்டியே ஆக வேண்டும். கொரோனா பெருந்தொற்று உடனடியாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்றால் நீண்ட கால நோக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. அதில் கல்வி, தொழில் வளர்ச்சி ஆகியவை அந்த வரிசையில் வருகின்றன.

இதில் கோவை, திருப்பூர் போன்ற தொழில் சார்ந்த பகுதிகளில் ஏற்கனவே உள்ள பல்வேறு சிக்கல்களுடன் இந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்களும் சேர்ந்து கொண்டுள்ளன. இடையில் சென்னையில் உள்ள போர்டு கார் கம்பெனி மூடப்படுவதாக அறிவித்திருப்பது அச்சத்தையும், சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது. இதில் நல்ல முறையில் தீர்வு காண்பதற்காக முதலமைச்சரே நேரடி கவனம் செலுத்துவதும் அறிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் தமிழக அரசு இது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகவே தெரிகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து திமுக அரசு பொறுப்பேற்ற போது, கோவை சார்ந்த இங்குள்ள பத்து தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி காண இயலாத நிலையில் கோவை பகுதி ஒதுக்கப்படும் என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்து பரவியது. ஆனால் அடுத்த முறை தானாக மக்கள் முன்வந்து, வெற்றி வாய்ப்பை வழங்கும் அளவுக்கு இப்பகுதிக்கு பணி செய்வோம் என்று கூறி முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்கேற்ப நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பும், தற்போதும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோவை வந்து தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்துச் சென்றிருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் பொதுவாக சிறு, குறுந்தொழிற்சாலை வகையைச் சேர்ந்தவை ஆகும். இவை மிகப்பெரும்பாலும் சிறு தொழில் முனைவோரால் தொடங்கப்பட்டு படிப்படியாக வளர்ந்து வருபவை. அவற்றின் சிக்கல்களும் தனித்தன்மை வாய்ந்தவை.

அதிலும் இந்த கொரோனா பெருந்தொற்று உலகத்தையே ஒரு புரட்டு புரட்டிப் போட்ட பிறகு இப்பகுதி தொழில்துறையும் தடுமாறித்தான் போய் இருக்கிறது. அந்தந்த தொழில் துறை சார்ந்த சிக்கல்கள் ஒருபுறம் இருக்கின்றன. அதாவது நிதிப்பற்றாக்குறை, மூலப்பொருள் விலையேற்றம் ஆகியவற்றை இந்த வரிசையில் கொண்டு வரலாம். ஆனால் பொதுவாக தமிழ்நாடு அளவில் காணப்படும், அனைத்து உற்பத்தி, சேவை துறைகளுக்குமான தொழில்களுக்கு உருவாகியுள்ள பொதுவான சிக்கல் என்னவென்றால் திறன்மிகு தொழிலாளர் தட்டுப்பாடு ஆகும்.

இதையே வேறு வகையில் சொல்வதென்றால் படித்த பல இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் திண்டாட்டம் உள்ள தமிழ்நாட்டில் பல ஆயிரம் பணியிடங்களுக்கு தகுந்த தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலையும் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. அதிலும் புளு காலர் வேலை என்று சொல்லப்படும் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் பணி புரிய திறன்மிகு தொழிலாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலிதான் எங்கு பார்த்தாலும் வேற்று மாநிலத் தொழிலாளர்கள் பெருமளவில் பணிபுரிவதாகும்.

இன்று இங்குள்ள இளைஞர்கள் கலை அறிவியல், மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளை படித்து விட்ட பட்டதாரிகளாக மாறியதால் இது போன்ற தொழிற்சாலைப் பணிகளுக்கு வர மாட்டேன் என்று வேறு எதையோ எதிர்பார்த்து காத்திருப்பது; அடுத்தது இது போன்ற பணிகளைச் செய்ய எந்த வித முயற்சியும், பயிற்சியும் இல்லாதது. இந்த இரண்டும் சேர்ந்த இன்று தமிழக இளைஞர்கள் என்ற படை இருந்தும், தமிழக தொழில்துறையைத் தடுமாற வைத்துக் கொண்டு இருக்கிறது.

இதனைப் போக்க இங்குள்ள தொழில் அமைப்புகள் தொழில் பயிற்சிகளை தங்கள் தொழிற்சாலைகளில் வழங்கத் தயாராக இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள தொழில்பயிற்சி நிலையங்களும் தயாராக உள்ளன. என்றாலும் இதற்கான ஒரு ஒருங்கிணைப்பு நாடு தழுவிய அளவில் தேவைப்படுகிறது. இதைச்செய்ய அரசாங்கத்தால் மட்டும்தான் முடியும்.

முதலில் எந்தெந்த விதமான தொழிற்சாலைகளுக்கு, எந்த விதமான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்பதை ஒரு வல்லுநர் குழுவை வைத்து முடிவு செய்து அதற்கேற்ப பயிற்சிகளைத் தருவது அவசியம். நாடு முழுவதும் பிட்டர், பிளம்பர் என்று ஒரே பயிற்சி தந்து வெளியே தள்ளுவது சரியல்ல. அதற்குப் பதிலாக அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நூற்பாலைப் பணி, கணிணி பணி, ஆடை வடிவமைப்பு, தையல் என்று துறை சார்ந்த தொழிலாளர்களை உருவாக்கவேண்டும் . இதற்கு அந்தந்த தொழில் துறையினர் ஒத்துழைத்து பயிற்சி வழங்குவதிலும், பணி வழங்குவதிலும் முன்னிற்க வேண்டும்.

அடுத்ததாக இது போன்ற தொழிற்சாலைப் பணிகளைச் செய்வது ஒன்றும் குறைந்ததல்ல; வேலை இல்லாமல் இருப்பதுதான் இழிவானது என்ற ஒரு பொதுக்கருத்தையும் உருவாக்க வேண்டும்.

நாமக்கல் கவிஞர் கூறிய

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ?”

என்ற கவிதை வரிகளை வாழ்க்கை வரிகளாக எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம். இதைச் செய்யத் தவறினால் இப்போது இருக்கும் தொழிற்சாலைகள் மட்டுல்ல, இளைஞர்கள் மட்டுமல்ல. நாட்டின் எதிர்காலமே பாதிக்கும். இந்தியாவிலேயே தொழில் துறையில் முன்னேறியதாக உள்ள நம் மாநிலம் இத்தனை கட்டமைப்புகளை வைத்திருந்தும் முன்னேற முடியாமல் போய் விடும். அதற்கு இடமளித்து விடக்கூடாது.

இன்னொரு புறம் ஏற்கனவே இருக்கும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதாகவும், புதிய தொழில் முனைவோரை வரவேற்பதாகவும் அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதுதான் இன்றைய தேவை. இதனை நன்கு உணர்ந்தவர்கள் தான் நமது தமிழக முதலமைச்சரும், தொழில் துறை அமைச்சரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.