கோவைக்கு கிடைக்குமா மாநிலங்களவை உறுப்பினர் பதவி?

கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவை மாவட்டத்தில் யார் முகத்தை முன்னிலைப்படுத்துவது என்று திமுக தவிக்கிறதா?  அல்லது முகமில்லாமல் தவிக்கிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.

திமுக சந்தித்த 1957 பேரவைத் தேர்தலில் இருந்தே கொங்கு மண்டலம் திமுகவுக்கு சவாலான பகுதியாகவே இருந்து வருகிறது.  அதுவும் கொங்கு மண்டலத்தின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது கோவை மாவட்டம் எப்போதும் சவால் தான்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்டச் செயலராக கோவை செழியன் காலத்திலும் சரி,  அமைச்சர்களாக கோலோச்சிய மு.கண்ணப்பன்,  பொங்கலூர் நா.பழனிசாமி காலத்திலும் சரி திமுக நிலைமை இது தான்.  தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது கோவை மாவட்டம் சற்று வித்தியாசமான பகுதியாக இருப்பதும்,  அதற்கேற்ற வகையில் திமுக வியூகம் வகுத்து செயல்படாததும் தான் இங்கு திமுகவின் வெற்றிக்கொடியை நாட்ட முடியவில்லை என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில், கோவையை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.கவால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதித் தொகுதிகளைக்கூட வெல்ல முடியவில்லை.  அத்தேர்தலில் ஜி.கே.மூப்பனாரின் தமாகா,  இடதுசாரிகள் கூட்டணி இருந்ததால் திமுகவால் எளிதாக வெல்ல முடிந்தது. அதன்பிறகு வந்த பேரவைத் தேர்தல்களில் அதாவது கால் நூற்றாண்டாக திமுக கோவை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தை மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க இங்கு வலிமையுடன் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

முக்கியமாக கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்று சாதனை படைத்துள்ளது.  கோவையை முழுவதுமாக இழப்பது தி.மு.கவுக்கு முதன்முறை இல்லை. கடந்த ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களாகவே தி.மு.க கோவை மாவட்டத்தை இழந்துதான் வருகிறது.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்தாலும், கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே தி.மு.க கைப்பற்றியது.  2011 பேரவைத் தேர்தலில் கோவையில் மீண்டும் முழு வெற்றிபெற்றது அ.தி.மு.க. 2016 பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியை மட்டும் தி.மு.க கைப்பற்றியது.  2021 பேரவைத் தேர்தலில் அதுவுமில்லை.

2019 மக்களவைத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும் தி.மு.க முழுவெற்றியைப் பெற்றது. அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தி.மு.க தான் முன்னிலை வகித்தது.  நாட்டிலேயே பாஜகவை வீழ்த்திய ஒரே கம்யூனிஸ்ட் என்ற பெருமையுடன் கோவை எம்.பியாக இருக்கிறார் பி.ஆர்.நடராஜன்.

தற்போதைய தேர்தலில்கூட கோவை தெற்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு போன்ற தொகுதிகளில் சுமார் 5,000 வாக்குகளுக்குள்தான் வித்தியாசம்.  கோவை வடக்குத் தொகுதியைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளில் 1,000  முதல் 2,000 வாக்குகள்தான் வித்தியாசம்.  இங்கு திமுகவினர் இன்னும் இறங்கி களப்பணியாற்றியிருந்தால் முடிவுகள் மாறியிருக்கும் என்ற எண்ணம் எழுகிறது. இதற்கு அ.தி.மு.க வைப்போல வலுவான தலைவர்கள் இல்லாமல் இருப்பதே தி.மு.கவுக்கு இங்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கோவை மாவட்ட திமுகவில் உள்கட்சிப் பூசலும் பூகம்பமாக வெடித்து கொண்டேதான் இருக்கும்.  மற்ற கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல்கள் இருக்கத்தான் செய்யும்.  அதைக் கட்டுப்படுத்தத்தான் தலைவர்கள் இருப்பர். ஆனால், கோவை தி.மு.கவில் உட்கட்சிப் பூசலுக்கு காரணமே அந்தத் தலைவர்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோவையை 5 மாவட்டங்களாகப் பிரித்து திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக சி.ஆர்.ராமச்சந்திரன்,  கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ்,  கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேனாதிபதி,   கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நா.கார்த்திக்,  கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பையா (எ) ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இருப்பினும்,  கடந்த பேரவைத் தேர்தலுக்கு முன்புவரை மக்களிடம் இறங்கி அரசியல் செய்ய தலைவர்களும் தொண்டர்களும் முன்வரவில்லை என்று தோன்றுகிறது.  அதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக்கொண்டது.  ஒவ்வொரு தெருவிலும் அ.தி.மு.கவினர் மக்களிடம் இறங்கிப் பழகினர். ஆனால், தி.மு.கவினருக்கு அந்த மந்திரம் தெரியவில்லை. இதனால் எந்தவிதத்திலும் தி.மு.கவினால், அ.தி.மு.கவை வீழ்த்த முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சில தொகுதிகளில் மட்டுமே தி.மு.க வேட்பாளர்கள்   களப்பணி செய்துள்ளனர்.

பெரும்பாலான இடங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தான் அவர்கள் களத்துக்கே வந்தனர்.  பல பகுதிகளில் உட்கட்சிப் பூசலையும், பணப் பிரச்சினையையும் தி.மு.க சரிகட்டுவதற்குள் தேர்தல் முடிந்துவிட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக இருந்த காலத்திலேயே கோவை மாவட்டத்தில் உள்ள கோஷ்டி பூசலை ஒழிக்க பல வகைகளில் முயற்சித்தார். அனைத்து தரப்பையும் ஒன்றுபடுத்தி கட்சியை வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்டார். எத்தனையோ முறை சமரசமும் செய்துள்ளார். ஆனால் எதற்கும் மசியவில்லை கோவை மாவட்ட திமுகவினர். பொங்கலூர் பழனிசாமியால் கட்சி மாவட்டத்தில் நலிவடைந்துள்ளது, அவரிடம் இருக்கும் பொறுப்பைப் பறித்தால் கோவை மாவட்டத்தில் திமுகவை ஆஹா, ஓஹோவென வளர்ப்போம் என பேசியவர்கள் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டுபோய் விட்டனர்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் திமுக மேயர் வேட்பாளராக வருபவர் கோவை மாவட்ட திமுக முகமாக மாற வாய்ப்புள்ளதால் அதை மொழிவழி சிறுபான்மையினரில் ஒருவருக்கு திமுக தலைமை ஒதுக்கினால் திமுகவை கோவை மாவட்டத்தில் மேலும் வளர்த்தெடுக்க முடியும்.  அதேபோல இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில்  ஒரு பதவியை கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதும் கோவையில் திமுகவை வென்றெடுக்க உதவும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மென்மையான முகத்தை முன்னிறுத்துவது அவசியம்

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது,  கொங்கு மண்டலத்தில் மென்மையான இந்துத்துவா உணர்வு அனைத்துத் தரப்பு மக்களிடமும் உள்ளது.  குறிப்பாக ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அங்குள்ள மொழிவழி சிறுபான்மையினர், அருந்ததியர் ஒருங்கிணைந்து ஓட்டுப்போட்டு அதிமுகவை வெற்றிப்பெற செய்தனர்.

குறிப்பாக கோவை மாவட்ட அரசியலில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது 1998 குண்டு வெடிப்பு சம்பவம். இதன் விளைவு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்துத்துவா உணர்வு அதிகரித்துவிட்டது.   இதன் விளைவாகவே அதன்பிறகு நடந்த அனைத்துப் பேரவைத் தேர்தல்களிலும் திமுக தோல்வி அடைந்தது.  அந்த மக்களுக்கு பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மீது நம்பிக்கை பிறந்தது.

இதை உடைப்பதற்கு திமுகவில் மென்மையான இந்துத்துவா உணர்வுகொண்ட சமூக கட்டமைப்பைச் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.  எதிர்வரும் மேயர் தேர்தலில் திமுக கொள்கைகளை முன்னிறுத்தாமல்,  வளர்ச்சி,  அதிமுகவின் ஆதிக்கம் ஆகிய இரு புள்ளிகளை மட்டுமே மையமாக வைத்து ஒரு மென்மையான முகத்தை முன்னிறுத்தினால் அது திமுகவுக்கு வலுசேர்க்கும்.

மேலும், அண்மையில் நடந்த சில சம்பவங்கள், அதிமுகவினரை சற்றே கதிகலங்க செய்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை வலுப்படுத்தினால் தான் திமுக அடுத்தப் பேரவைத் தேர்தலில் கோவையில் வெற்றிக்கொடியை நாட்ட முடியும். குறிப்பாக கருணாநிதி காலத்தில் காங்கிரஸ் அல்லது தமாகா கூட்டணி பலத்தை நம்பியே கொங்கு மண்டலத்தில் களமாடுவார். ஆனால், ஸ்டாலினோ கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற புள்ளியில் நகர்வதால் கோவை மாவட்டத்தில் சில மாறுதல்கள் அதிவிரைவில் வரும் என தெரிகிறது என்றார் ரிஷி.