“அவினாசி சாலை மேம்பாலத்திற்கு வ.உ.சி பெயரை சூட்ட வேண்டும்”

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 150 வது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் இஸ்காப் எனும் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் ஆகியோர் இணைந்து, கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள வ.உ.சி மணி மண்டபத்தில் வ.உ.சி இழுத்த செக்கிற்கு மரியாதை செலுத்தி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக், தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடவும், மேலும் அவரது நினைவுநாள் தியாக திருநாளாக கடைபிடிக்கப்படும் எனவும், கப்பல் தொடர்பான துறைகளில் பங்காற்றி வரும் தமிழருக்கு ஆண்டுதோறும் வ.உ.சி பெயரில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது வழங்கி, ஐந்து இலட்சம் ரூபாய் நன்கொடை அளிக்கப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

தற்போது பணிகள் நடைபெற்று வரும் அவினாசி சாலை மேம்பாலத்தின் பெயருக்கு வ.உ.சி யின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் கோவையில் உள்ள வ.உ.சி பூங்காவில் அவரது முழு உருவ சிலை அமைப்பதை வரவேற்பதாக கூறிய அவர், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அவினாசி சாலையில் அவரது முழு உருவ சிலை அமைந்தால், வருங்கால தலைமுறையினர் செக்கிழுத்த செம்மலை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.