குறிச்சி குளத்தில் காவலர்களுக்கு அவசரகால பேரிடர் மீட்பு பயிற்சி

பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் காவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் கோவை குறிச்சி குளம் பகுதியில் நடைபெற்றது.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவதில் வருவாய் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவதில் தீயணைப்பு பேரிடர் மேலாண்மைத் துறை மிகுந்த பங்கு வகிக்கிறது. இத்தகைய சேவை பணிகளை பொதுமக்கள் பேரிடர் காலங்களில் பயன்படுத்தி சேதங்களை தவிர்க்கும் வகையில் பயிற்சி முகாம் மாவட்டந் தோறும் நடத்தபட்டு வருகிறது.

அந்த வகையில் காவலர்களுக்கான அவசரகால பேரிடர் மீட்பு பயிற்சியின் போது, படகு சவாரி, நீச்சல் பயிற்சி, பெருவெள்ள காலத்தில் மீட்பு பணி, கட்டிட இடிபாடுகளில் மீட்பு பணி, மரம் விழுந்தால் அகற்றுதல், விபத்து காலத்தில் உதவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் கோவை குறிச்சி குளம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பயிற்சி முகாமில் தீயணைப்புத் துறையினர் குறிச்சி குளத்தில் சிறப்பு பயிற்சிகளை காவலர்களுக்கு வழங்கினர்.

ஆண்-பெண் காவலர்கள் என இருபாலரும் குறிச்சி குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி முகாமை அந்த வழியாக சென்ற பொது மக்கள் நின்று வியப்புடன் பார்த்து சென்றனர்.