“கள்ளு மீதான தடையை நீக்கவில்லையென்றால் அஸ்வமேத யாகம் நடத்தப்படும்”

கள்ளு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்கவில்லை எனில் 2022 ஜனவரியில் அஸ்வமேத யாகம் சென்னையில் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கள்ளு நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டமைப்பின் செயலாளர் கள்ளு நல்லசாமி கூறியதாவது: 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய போராளிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோன்று அரசியல் அமைப்பு சட்டபடி ‘கள்’ இறக்கிய போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்ற வேண்டுகோளை வைப்பதாக தெரிவித்தார்.

கள் ஒரு போதை பொருள் அல்ல என்று நாங்கள் பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறோம் என்றும் கள் என்பது மக்களின் உணவு தேடும் உரிமை எனவே கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க 17 ஆண்டுகளாக தமிழ்நாடு கள் இயக்கம் போராடி வருகிறது என கூறினார். கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் இல்லையெனில் வருகின்ற 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காவது முறையாக சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும்.

இந்தியாவில் மக்கள் தொகையையும் கலப்படங்களையும் கட்டுப்படுத்தி இருந்தால் நாடு எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும். மருந்து பொருள்களில் இருந்து பல்வேறு பொருட்களில் தற்போது கலப்படங்கள் நடக்கிறது.

பீகார், கேரளாவில் எல்லாம் மதுவிற்கு தான் தடை விதிக்கப்பட்டது ஆனால் கள்ளுக்கு தடைவிதிக்கவில்லை அப்படி இருந்த தமிழகத்தில் மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது. கள்ளில் கலப்படம் செய்வதை தடுக்க இயலாததால் தடை விதிக்கப்படுகிறது என்றால் கலப்படத்தை தடுக்க அரசால் இயங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

பெரியார் ஒரு காலம் கள்ளை ஆதரித்தார். அதன் பின்பு தான் கள் இறக்கும் தென்னை மரங்களை வெட்டினார். பெரியாரின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என தெரிவித்தார். எனவே தமிழக அரசு கள்ளின் மீது போடப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.