கேபிஆர் கல்லூரியில் தேசிய வூசூ நடுவர்களுக்கான பயிற்சி

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் தேசிய வூசூ நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் தேசிய வூசூ நடுவர்களுக்கான பயிற்சி, கருத்தரங்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சாகுல் அமீது, வூசூ சர்வதேச நடுவர் சமீர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தேசிய அளவில் வூசூ கருத்தரங்கம் நடத்தப்படும். இந்த பயிற்சி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. கடந்த முறை 2017ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றது.

வூசூ என்னும் தற்காப்பு கலை நடுவர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள், தேசிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் நடுவராக பங்கு பெற தகுதி பெறுவார்கள். இங்கு துவக்கப்பட உள்ள போட்டியில் 24 மாநிலங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் சர்வதேச அளவில் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த தேசிய நடுவர் பயிற்சி முகாமில் பங்கு பெற்று தகுதி பெறுபவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு நடுவராக செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்படும். இந்த வூசூ தற்காப்பு கலையில் இரண்டு பிரிவுகள் உள்ளது சான்சூ (சண்டை)பிரிவு, தாவ்லூ (தனிநபர் விளையாட்டு) பிரிவு என உள்ளது. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் சர்வதேச தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளில் நடுவர் பயிற்சிக்கு தகுதி பெறுவார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நிறைய திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் ஆனால் இங்கு ஒரு தனி பயிற்சி மையம் இல்லை, அதனை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் வூசூ வீரர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. வூசூ தற்காப்பு கலைகளுக்கு இந்திய விளையாட்டுத் துறை பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தற்போது வூசூவில் நிறைய விருதுகளை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஊழியர் சங்கத்தின் தலைவர் பெப்பந்நர் சிங் பஜ்வா, செயலாளர் ஜான், கோவை மாவட்ட வூசூ சங்கத்தின் தலைவர் ஜெயபாரதி, கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் உடனிருந்தனர்.

இந்த தேசிய கருத்தரங்கிற்கு தேவையான ஏற்பாடுகளையும் வசதிகளையும் கல்லூரியின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.