சினிமாகாரர்களுக்கு சமூக அக்கறை வேண்டும்

நம்முடைய ஒவ்வொரு செயலும் பல தலைமுறைகள் பறைசாற்றுபவையாக இருக்க வேண்டும். அதுவே தலைச்சிறந்த வெற்றியாகும். உலக சினிமா வரலாற்றில் வெற்றி பெறுபவர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள்தான். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எந்த முயற்சியும் எடுக்காமல், வெறும் வாயால் பேசுபவர்கள் இங்கு வெற்றி பெறுவதில்லை. அதுபோல அல்லாமல், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிப் படிக்கட்டாக மாற வேண்டும் என்று விடாமுயற்சியுடன் உழைத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஷ்ணுபிரியனைப் பற்றியும், அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான அனுபவங்களை பற்றி அவரே நம்முடன் பகிர்ந்துகொண்ட சில நினைவுகள்…

‘சிறு வயதில் இருந்து எனக்கு காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பது வழக்கம். முக்கியமாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் என்னை அதிகமாக ஈர்த்தது. காமிக்ஸ் புத்தகத்தில் இருக்கும் கதாநாயகன் எப்பொழுதும் தனித்துவம் வாய்ந்தவனாக இருப்பது என்னை அதிகமாக சிந்திக்க வைத்தது. என் நண்பர்கள் மூலம் அதில் இருக்கும் சமூகம் சார்ந்த தகவல்களை நான் சேகரிக்க ஆரம்பித்தேன். இது அனைத்தையும் சினிமா என்ற ஊடகம் மூலமாக நம்மால் கொண்டு வர முடியும் என்று எண்ணி சென்னைக்கு வந்தேன். ஆனால் இங்கு வந்தபிறகுதான், நான் நினைத்த சினிமா உலகம் வேறு. இங்கு இருக்கும் சினிமா உலகம் வேறு என்பதைப் புரிந்து கொண்டேன்.

பிறகு எனக்குத் தெரிந்த பேராசிரியர், சென்னையில் உள்ள கூத்துப் பட்டறையில் சேர்வதற்கு சிபாரிசு கடிதம் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு முத்துசாமி ஐயாவை சந்தித்தேன். அவரிடம் என்னுள் இருக்கும் சினிமா குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். என்னைப் பாராட்டிய அவர், நீ கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்லி என்னை கூத்துப்பட்டறையில் சேர்த்து கொண்டார். காலங்கள் வேகமாக நகர ஒருநாள், மலையாள சினிமா உலகின் பிதாமகன் அடூர் கோபாலகிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் படத்தின் பெயர்தான் ‘நிழல் குத்து’. நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு சினிமா உலகம் இருக்கின்றது என்பதை அந்த படத்தில் நடிக்கும்போது உணர்ந்தேன்.

மக்களுக்கு நல்ல கருத்து சொல்ல வேண்டும். தரமான சினிமாவை தமிழில் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் அதற்கு வாய்ப்பு அமைத்துக் கொடுத்தார் இயக்குநர் செல்வா. அவரது படம் வெளியான பிறகு ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் எனக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் நான் மறக்க முடியாத படம் அது. காரணம், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாஸ்மேட்ஸ் படத்தைத் தமிழில் எடுத்தார்கள். அதுதான் நினைத்தாலே இனிக்கும். நடிகர் பிருதிவிராஜ், சக்தி, கார்த்திக் குமார், பிரியா மணி, ஜீவா போன்ற நல்ல நண்பர்கள் எனக்கு அந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் கிடைத்தார்கள்.

அந்த படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பலர் பாராட்டினர். முக்கியமாக பாக்யராஜ் சாருடன் இருக்கும் காட்சி பலரால் பாராட்டப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, நான் கதாநாயகனாக நடித்த படம் ‘மை’. நம்மைக் சுற்றி இருக்கும் அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பது, அந்தப் படத்தில் ரொம்ப அழகாக சொல்லப்பட்டிருக்கும். வியாபார ரீதியாக படம் வெற்றி பெறாவிட்டாலும், விமர்சனம் ரீதியாக படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்குப் பிறகு பிருதிவி ராஜ் என்னை அழைத்தார். நல்ல கதையம்சம் உள்ள திரைப்படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நீ உடனே கிளம்பி வா என்று என்னை அழைத்தார். நான் உடனே அங்கு சென்றேன். படத்தின் பெயர் ‘புதியமுகம்’ நான் எதிர்பார்க்காத நெகடிவ் கதாபாத்திரம். படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து படம் வெளியானதும் படத்தைப் பார்ப்பதற்கு கேரளா சென்றிருந்தேன்.

முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியில் வந்தவுடன் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். பாராட்ட அல்ல, திட்டுவதற்கு. ஏனென்றால் அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அப்படி. அந்த நிகழ்ச்சி, என்றைக்கும் மறக்க முடியாத நினைவுகள். தற்போது மெர்லின் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இது விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் போஸ்டரை பார்க்கும்பொழுது பேய் படம்போல் உணர்வீர்கள். ஆனால் மற்ற படங்களைப்போல் இது கிடையாது. இப்படம், உளவியல் சார்ந்த விஷயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. படத்தில் வெற்றிவேந்தேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பல சமூகப் பிரச்னைகளுக்கு பின்னால் இருக்கும் சொல்லப்படாத விஷயங்களை மெர்லின் படத்தில் பார்க்கலாம்.

உதாரணமாக, நம் நாட்டிலுள்ள கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுபோன்ற கருத்துக்கள். பலரின் மனதில் இருக்கும் பல கேள்விகளுக்கு மெர்லின் படம் பதில் அளிக்கும். சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும். ஒரு நல்ல திரைப்படம் மக்களிடம் சென்று அடையும்போது ஒரு மாற்றத்தை நம்மால் பார்க்க முடியும். பாரதியார் புதுச்சேரியில் பத்து வருடம் இருந்தார் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? பல ஊடகங்கள், பல சமூக வலைத்தளங்களில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாம் எல்லோரும் யோசிக்க வேண்டும். பல வருடங்களாக சினிமாக்காரன்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறான்.

ரஜினி, கமல் அரசியல் பயணம் வெற்றி அடையுமா என்று கேட்டால், அதற்கு பதில் மக்கள் கூறுவார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை வெற்றி அடையச் செய்வதும், தோல்வி அடையச் செய்வதும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது. மெர்லின் பட இயக்குநர் கிரா, தயரிப்பாளர் சதீஷ்குமார், சிங்கம் புலி, ஜீவா, முருகதாஸ், பவர் ஸ்டார் என படக்குழுவைச் சேர்ந்த எல்லாத்துக்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன்’ என்றார்.

— பாண்டிய ராஜ் ..