75வது சுதந்திர தினம் : தேசிய கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் 75 ஆவது சுதந்திர தின விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று (15.08.2021) கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை ஆயுதப்படை மற்றும் மாநகர நகர, மாவட்ட காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். பிறகு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட 350 பேருக்கு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பாராட்டுச் சான்றிதழ்கள் பதக்கங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் தாசில்தார், துணை தாசில்தார் இணைந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று பொன்னாடை அணிவித்து சான்றிதழ் கொடுத்து கௌரவிக்கப் படுகிறார்கள்.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மைதானத்துக்கு வரக்கூடியவர்கள் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், டி.ஐ.ஜி முத்துசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, உதவி கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.