பிறந்த குழந்தையை கொஞ்ச ஜப்பானியர்களின் புதிய வழி!

கொரோனா நோய்த்தொற்று நம் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்நாளில் நாம் கொண்டாடும் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குழந்தை பிறப்பு என்பது பெற்றோர்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஆனால் இந்த தொற்றுநோய் காலத்தில் புதிதாக பிறக்கும் குழந்தையை சொந்த பந்தங்களிடம் காட்ட இயலாமல் புதிய பெற்றோரும் மனமுடைகின்றனர். இதனால் ஜப்பானியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒரு பையில் குழந்தையின் எடை அளவிற்கு அரிசியை நிரப்பி மூட்டையான குழந்தை வடிவத்தில் அதை அலங்காரம் செய்கின்றனர். சிலர் அதை சிறிய போர்வையில் சுற்றி பார்ப்பதற்கு குழந்தை போலவே உருவாக்குகின்றனர்.

அந்த அரிசிப் பையை, அவர்கள் தங்களின் உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பிவைக்கின்றனர். குழந்தையை நேரில் வந்து கொஞ்ச முடியாதவர்கள். கிடைக்கப்பெற்ற அரிசிப் பையைக் குழந்தையாகப் பாவித்து கொஞ்சி வாழ்த்துகின்றனர். அந்த வாழ்த்து குழந்தைக்கு சென்று சேரும் என நம்பப்படுகிறது. வயதானோர் அந்த அரிசிப் பையை கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலம் மகிழ்ச்சியைக் கடத்தி, பரப்பி பெருந்தொற்று காலத்திலும் பேரின்பம் காண்கின்றனர் ஜப்பானிய மக்கள்.

தற்போது இந்த அரிசிப் பைகளைத் தயாரிக்க புதுப்புது நிறுவனங்கள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பையின் விலையும் எடையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. 3.5 கிலோ எடை கொண்ட ஒரு பையின் விலை ஜப்பானிய மதிப்பில் 3,500 யென் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.