ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகள் அறிந்திருக்க வேண்டும் – நீ.குமார்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர்  வினையியல் துறையின் சார்பாக மாநில அளவிலான “பயிர் வினையியல் குறைபாடுகள் மற்றும் நிவர்த்தி“ எனும் தலைப்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி  (29.07.2021) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்  நீ. குமார்   துவக்கி வைத்து,  சரிவிகித ஊட்டச்சத்து வழங்கல் மூலம் அதிக பயிர்  வளர்ச்சி மற்றும் மகசூல்  பெறுவதன் தேவையையும், தாவர வளர்ச்சியில் ஒவ்வொரு ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் விவசாயிகள் அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் (பயிர் மேலாண்மை) கீதாலட்சுமி,  காலநிலை மாற்றத்தால் உலக உணவு பாதுகாப்பில் சரிவிகித ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும், ஒற்றைப்பயிர் சாகுபடி, சமநிலையற்ற ஊட்டச்சத்து அளித்தல் போன்றவற்றால் பயிர் மற்றும் மண் வளத்தில் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

மேலும் இவ்விழாவில் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர்  சிவக்குமார் கலந்து கொண்டு சரிவிகித மற்றும் உகந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சிகளால் விவசாயிகள் பெறும் நன்மைகளைப் பற்றி விளக்கமாகக் கூறினார்.

இந்த விழிப்புணர்வு பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய ஆராய்ச்சியாளர்கள் இணையவழி மூலம் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது விவசாய பெருமக்கள் பயனடையும் வகையில் தமிழில் “வேளாண் பயிர்கள்: ஊட்டச்சத்துக் குறைபாடுகள் மற்றும் நிவர்த்தி” மற்றும் “தோட்டக்கலைப் பயிர்கள்: ஊட்டச்சத்துக் குறைபாடுகள் மற்றும் நிவர்த்தி” எனும் தலைப்புகளில் இரண்டு புத்தகங்கள் பல்கலைக்கழக துணைவேந்தரால் வெளியிடப்பட்டது.