புலிகள் இருந்தால் வனப்பகுதி வளமாக இருக்கும்!

இந்தியாவின் தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை குறைந்து அழிவின் விளிம்பு நிலையில் உள்ள உயிரினங்களில் ஒன்றாக சென்றுவிட்டது. புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை தடுப்பதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2005-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. புலிகளைப் பாதுகாக்க ஆண்டுதோறும்  உலக புலிகள் தினம் ஜூலை 29 கடைப்பிடிக்கப்படுகிறது.

சட்டத்திற்கு புறம்பாக புலியின் தோல், பல் நகங்களுக்காக அவற்றை வேட்டையாடுதல், காடுகளை அழித்தல், காடுகளுக்குள் சாலைகள் அமைத்தல், புலிகளுக்குள் அதன் எல்லைக்கான சண்டை, புலிகள் ஊருக்குள் வருவதால் அதைத் தாக்குதல்,  பிற இயற்கை  காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைகிறது. புலிகள் வளமான காட்டின் குறியீடாக உள்ளது. உணவு சங்கிலியின் முதல் படியில் இருக்கும் புலி இருந்தால், அந்த வனப்பகுதியில் உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் வளமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்தியாவில் புலிகளின் கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. அதில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கடைசி கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது.

2018 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் அதிகமான புலிகள் வாழும் மாநிலமாக மத்தியபிரதேசம் உள்ளது. இங்கு 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புலிகளின் எண்ணிக்கை அழிவின் விளிம்புக்கு சென்ற நிலையில், தற்போது மெல்ல அதிகரிப்பதாக வெளியிடப்படும் ஆய்வு முடிவு சமூக ஆர்வலர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள்  உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை 5-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இந்த புலிகள் காப்பகங்களில் முதுமலை காப்பகம் தான் சிறியது.

தி இந்து தமிழ் திசை செய்தியில் வெளியான கட்டுரையில், “முதுமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், முதுமலையில் மொத்தம் 162 புலிகள் இருப்பதாகவும், இதில், 103 புலிகள் முதுமலையை மட்டுமே வாழ்விடமாகக் கொண்டுள்ளதாகவும், 59 புலிகள் வெளிவட்டப் பகுதிகளில் இருந்து வந்து முதுமலையை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரியவந்துள்ளது”. என குறிப்பிடப்பட்டுள்ளது.