சீனாவில் குரங்கு பி வைரஸ் : கால்நடை மருத்துவர் ஒருவர் பலி !

சீனா வூகான் மாகாணத்தில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனுடைய தாக்கம் இன்னும் பல நாடுகளில் குறைய வில்லை இந்நிலையில் குரங்கு பி வைரஸ் என்ற வைரசால் கால்நடை மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த நாட்டின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா என்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த 2020 முதல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார சீரழிவுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் புதியதாக குரங்கு பி என்ற வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது. அந்த நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கடந்த மார்ச் மாத இறுதியில் 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர், இரண்டு உயிரிழந்த குரங்குகளை பரிசோதனை செய்துள்ளார்.

பின்னர், ஒரு மாதம் கழித்து அவருக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் சில மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் 27-ந் தேதி உயிரிழந்தார். அவர் சிகிச்சை பெற்றபோது அவரது ரத்தம் மற்றும் எச்சில் மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது.

இந்த மாதிரிகள் அனைத்தும், அந்த நாட்டில் உள்ள தேசிய வைரஸ் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு அந்த மாதிரிகளுக்கு குரங்கு பி வைரஸ், வெரிசிலா ஜோஸ்டர் வைரஸ், மங்கி பாக்ஸ் வைரஸ் மற்றும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் உயிரிழந்த கால்நடை மருத்துவருக்கு குரங்கு பி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, குரங்கு பி வைரசால் உயிரிழந்த கால்நடை மருத்துவரின் குடும்பம் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்கள் யாருக்கும் பாதிப்ப ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகள் மூலம் 1932ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நேரடியாக குரங்குகளின் கழிவுகள் மூலமாகவும், சுரப்பிகள் மூலமாகவும் பரவும். இந்த குரங்கு பி வைரசால் பாதிக்கப்படுபவர்களில் 70 முதல் 80 சதவீதம் வரை உயிரிழப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் 1 முதல் 3 வாரங்களுக்குள் அறிகுறி தென்படும். பின்னர், மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் இந்த வைரசால் மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், விலங்குகள் ஆய்வகங்களில் பணியாற்றும் நபர்களுக்கும் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்களும், சுகாதரத்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்த வரும் சூழலில், தற்போது குரங்கு பி வைரஸ் எனும் புதிய வைரஸ் சீனாவில் ஏற்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.