தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்?

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பலர் ஓய்வூதியத்தை மாற்ற வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்ட முந்தைய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றியமைப்பதற்காக சிறப்பு குழுவை ஏற்படுத்தியது.

ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்த எவ்வித நடவடிக்கைகளையும் இந்த குழு மேற்கொள்ளவில்லை. இதற்கிடையில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைத்த திமுக தலைமையிலான அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதிகளின் போது தெரிவித்திருந்தது. அதனால் பழைய ஓய்வூதிய திட்டம் திரும்ப பெறப்படும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் திரும்ப பெறப்பட்டால், ஊழியர் ஒருவர் பணி ஓய்வு பெரும் போது வாங்கும் இறுதி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியம் கிடைக்கும். இது குறித்த அறிவிப்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.