நாம் மாறினால் தான் சமுதாயமும் மாற்றம் பெரும்

கொரோனா நெருக்கடியால் 2020 ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும், தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் 40% அதிகரித்துள்ளதாக சிஆர்ஒய் (CRY) நடத்திய ஆய்வின் முடிவில் கூறப்பட்டது. சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 72 பழங்குடி கிராமங்களிலும் தொடர்ந்து குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனாவுக்கு முன்னரும், குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இயங்காமல் இருப்பது. பல ஆண்டாண்டுகாலாக கல்வி மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தான் இது நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்திலும் இது அதிகரித்துள்ளது.

பள்ளிக் கூடங்கள் இயக்கத்தில் இருந்தால் ஒரு சிற்றூரில் நடக்கும் குழந்தைத் திருமணம் குறித்த தகவல் முன்கூட்டியே அறியப்பட்டு அவற்றைத் தடுத்து நிறுத்த வாய்ப்புகள் அதிகம். கொரோனா காரணமாகப் பள்ளிகள் கடந்த ஒன்றை வருடங்களாகவே திறக்கப்படவில்லை. விளைவு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான பிளவு அதிகரித்துள்ளது. இந்தப் பிளவு கிராமப் புறங்களிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளிலும் குழந்தைத் திருமணங்களாக நடைபெற வழிவகுத்துள்ளன.

அதுமட்டுமல்லாது பெற்றோரை இழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பைச் சுட்டிக் காட்டி அவர்களின் உற்றார் உறவினர்களும் கொடுக்கும் அழுத்தமும் குழந்தைத் திருமணத்திற்கு காரணமாகியுள்ளது. குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடுத்து தமிழகமும் உள்ளது.

குழந்தை திருமணங்களை தடுப்பது என்பது சற்று கடினமானது தான். இருப்பினும் பள்ளி, கல்லூரியை இடையில் நிறுத்தாமல் இருப்பது தான் இதனை நடக்கவிடாமல் தடுக்கும் ஒரே ஆயுதமாக இருக்கும். கல்வியை விட்டுவிட்டு, பொருளாதார சிக்கலால் குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பானது என்றாலும் அதை விட ஒரு தலைமுறையையே அது பாதிக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தலைமுறையை பலிகொடுத்து தான் நிகழ்காலத்தை கடத்த வேண்டுமா? என்ன. நாம் மாறினால் தான் நம் சமுதாயமும் மாறும்.