சிறு,  குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதியை எளிதாக்கும் எம்1எக்சேஞ்ச்

வர்த்தக பெறுதல்கள் தள்ளுபடி முறை தளமான (Trade Receivables Discounting System (TReDS)) எம்1 எக்சேஞ்ச் (M1Xchange) நிறுவனம் கொரோனா தொற்று ஆண்டான 2020-21-ம் ஆண்டில் அதன் செயல்பாட்டில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

மாநிலத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கியமையமாக திகழும் கோவையில்  இந்நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன.  இதில் சுமார் 100 நிறுவனங்கள் மட்டுமே எம்1எக்சேஞ்ச்    மூலம் 222 கோடி ரூபாய் மதிப்புள்ள விலைப்பட்டியல்களை தள்ளுபடி செய்திருக்கின்றன.

இந்த விலைப் பட்டியல் தள்ளுபடிகள் ஆண்டுக்கு சராசரியாக 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் 37 வங்கிகளால் எம்1எக்சேஞ்ச்சில்  செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் இந்த வருவாய் இருமடங்காக அதிகரித்தபோது, கோவையில் அது குறைந்து காணப்பட்டது. அதற்கு காரணம் இங்குள்ள நிறுவனங்கள் வர்த்தக பெறுதல்கள் தள்ளுபடி முறையை   அதிக அளவில் பயன்படுத்தவில்லை.

இது குறித்து எம்1எக்சேஞ்ச்  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்தீப் மொகிந்துரு  கூறுகையில், பொதுவாக மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், குறிப்பாக கோவை பிராந்தியத்தில் உள்ளவை தொற்று நோயின்போது வங்கி கடனை விட குறைந்த வட்டி விகிதத்தில் அவர்களுக்கு தேவையான கடனை பெறத் தவறிவிட்டன. இந்த நிறுவனங்களை பொறுத்தவரை 1 சதவீதம் கூட வர்த்தக பெறுதல்கள் தள்ளுபடி முறை  வசதியை பயன்படுத்தவில்லை. ஆனால் பில்கள் தள்ளுபடி செய்யப்படும் சராசரி வட்டி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதம் ஆகும்.

500 கோடி ரூபாய் ஈட்டும் அனைத்து நிறுவனங்களையும் வர்த்தக பெறுதல்கள் தள்ளுபடி முறையுடன்   குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் இந்த முறையை பின்பற்றுவது என்பது கட்டாயமாகும். இந்த நிலையில் பயனர்களுக்கான வர்த்தக முறையை டிஜிட்டல் மயமாக்கி அவர்களின் வணிகத்தை எம்1 எக்ஸ்சேஞ்ச்  எளிதாக்குகிறது என்று தெரிவித்தார்.