‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’திட்டத்தின் கீழ் 555 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் ஆணை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக  555 பயனாளிகளுக்கு, முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ’ என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 38,891 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 2898 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,  முறையான தகவல்கள் இல்லாத 3768  மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 32,225 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இம்மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சிறப்புத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வுகளை துரிதப்படுத்தி விரைவில் மீதமுள்ள அனைத்து மனுக்களுக்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.