கோவையின் கேஜிஐஎஸ்எல் மலேசியாவின் ஏத்தன்ஸ்ஸை கையகப்படுத்தியது

உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் சேவைகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் வர்த்தகத் தீர்வுகளை அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ப்ரைவேட் லிமிடெட், இன்சூர் டெக் என்றழைக்கப்படும் காப்பீட்டு தொழில்நுட்பத்தில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மலேசியாவில் செயல்பட்டு வரும் தனது முழு உரிம துணை நிறுவனமான கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் சென்டிரியன் பெர்கத் மூலமாக, முன்னணி காப்பீடு தொழில்நுட்ப நிறுவனமான ஏத்தன்ஸ் சென்டிரியன் பெர்கத் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையானது, காப்பீட்டு தொழில்நுட்பப் பிரிவில் கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் யுக்திகளில் முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

கேஜிஐஎஸ்எல்-ன் இயக்குனரும் தலைமை நிர்வாக அலுவலருமான பிரசாத் சண்முகம் பேசுகையில், இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையினால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதற்கான திறனைக் கட்டமைக்க நமக்கு சில ஆண்டுகளாவது ஆகும். அதனால், இந்த கையகப்படுத்துல் நடவடிக்கையின் மூலம் இவையனைத்தும் கேஜிஐஎஸ்எல்-க்கு உடனடியாக பலம் சேர்க்கும் என்று தெரிவித்தார்.

மேலும், கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அசோக் பக்தவச்சலம் பேசுகையில், வாடிக்கையாளர்கள், நிறுவன செயல்பாடுகள் மற்றும் பணியாளர்களுக்குச் சிறந்த மதிப்பை வழங்கவேண்டுமென்ற ஒரே நல்லெண்ணத்துடன், அதையே நோக்கமாக செயல்படுத்த இரண்டு முன்னணி காப்பீட்டு தொழில்நுட்ப நிறுவனங்களையும் இந்த கையகப்படுத்துதல் ஒன்றிணைந்திருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் எங்களது வளர்ச்சி இன்னும் பல மடங்காக இருக்குமென்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.