சத்தமில்லாமல் சிக்ஸர் அடித்த முதல்வர்

சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்ற பிறகு முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து முடிந்து இருக்கிறது. அது பல செய்திகளை சொல்லாமல் சொல்லி இருக்கிறது. முதலாவதாக ஆளுநர் உரை முறையாக திட்டமிட்டபடி நிகழ்ந்தது. பிறகு ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கியபோது எந்தவித குழப்பமும் இல்லாமல் வெளிநடப்பு, சலசலப்பு என்று எதுவும் இல்லாமல் அதன் மீது தமிழக முதல்வர் உட்பட 23 சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நல்ல முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாகவே தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் என்பது காலம் காலமாக சுவையும் சூடுமாக சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறது. பெரிய பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருந்த, நடமாடிய, உரையாற்றிய இடம் தமிழக சட்டமன்றம். இந்த முறையும் அது சிறப்பாக நடந்தேறியது என்றே சொல்ல வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சரியாகவே கேள்விகள் எழுப்பி தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தார்கள்.

ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் சட்டமன்ற உரைகள் இந்த முறை சிறப்பாகவும், பண்பட்டதாகவும் சுவையானதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற ஆளும் கட்சி எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு ஒரு அச்சாரமாக அவருடைய உரையும், பதில்களும் இருந்தது. கூடவே ஒவ்வொரு முறையும் மாநில அரசின் எதிர்கால செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும் கோடிட்டு காட்டுவதாக அமைந்திருந்தது. முதலில் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளுக்கு முதலிடம் தந்ததோடு, அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை குறித்த அறிவிப்பு அரசின் திட்டங்களை காட்டுகிறது. கூடவே மாநில அளவில் வழிகாட்டும் ஒரு திட்டக்குழுவை அமைத்ததோடு, தமிழக பொருளாதார மேம்பாட்டுக்காக உலக அளவிலான சர்வதேச புகழ் பெற்ற பொருளாதார மேதைகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து முதலமைச்சர் ஒரு சத்தமில்லாமல் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

கோயம்புத்தூர் பகுதி கவனிக்கப்படவில்லை, ஒன்றியம் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது என்பன போன்ற குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை அளித்து இருக்கிறார். வாக்களித்தவர்கள், மகிழச்சி அடையும் விதமாகவும், வாக்களிக்காதவர்கள் ஏன் வாக்களிக்காமல் விட்டோம் என்று வருந்தும் விதமாகவும் இந்த அரசின் செயல்பாடுகள் இருக்கும் என்று பதிலளித்திருக்கிறார். அடுத்து ஒன்றியம் என்ற வார்த்தையைக் கண்டு மிரள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளதைத் தான் பயன்படுத்துகிறோம் என்றும் மாநில உரிமைகள் என்ற விஷயத்தில்  தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற ஒரு சமிக்ஞையும் காட்டி இருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று சரியாக கவனிக்கப்படவில்லை, என்ற எதிர்க்கட்சிகளின் குறிப்பாக அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தை ஏன் காணோம்’ என்று பிப்ரவரி இறுதி முதல் மே மாதம் வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது ஏன் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று சரியாக கேள்வியை திருப்பிப் போட்டிருக்கிறார்.

முதல் சட்டமன்றத் தொடர், முதல் மாத ஆட்சி என்று பார்க்கும் போது சிறப்பாகவே செயல்படுவதாக வைத்துக் கொள்ளலாம். என்றாலும் ஆங்காங்கே சில நெருடல்களும் இருக்கத் தான் செய்கின்றன. நீட் தேர்வு இருக்குமா, இருக்காதா என்ற கேள்விக்கு இன்னும் ஒரு தெளிவான பதில் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. பொருளாதார சிக்கல்கள் அதிகமாக உள்ள நிலையில் அரசின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு சரியான பாதை இன்னும் தெரியவில்லை. ஏனென்றால் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள், பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் என்று ஒரு பெரிய சுமையே பொருளாதாரத்தின் மீது விழுந்திருக்கிறது. ஏற்கனவே லட்சக்கணக்கான கோடி ரூபாய் பற்றாக்குறை கொண்ட தமிழக அரசு வரும் காலத்தில் ஏற்படக்கூடிய நிதிப்பற்றாக் குறையையும், நெருக்கடியையும் எப்படி சமாளிக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும். தமிழக முதலமைச்சர் மரியாதை நிமித்தமாக  பிரதமரை சந்தித்திருந்தாலும் ஒன்றியம் என்ற வார்த்தை எழுப்பிய அதிர்வலைகள், நீட் தேர்வு எதிர்ப்பு உள்ளிட்டவை என மாநில அரசு குரல் எழுப்புவது எவ்விதமாக நல்ல பலன்களைத் தரப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதற்கிடையில் ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டு, அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன அணில் காரணம், மற்றும் சேலம் பகுதியில் நடைபெற்ற போலீஸ்காரர்களால் தாக்கப்பட்ட வியாபாரியின் மரணம் ஆகியவை மக்களிடையே புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. அதையெல்லாம் மீறிய நம்பிக்கையும் இருப்பது தெரிகிறது.

என்றாலும் முதலமைச்சரே சொல்லி இருப்பது போல இது ஒரு  ட்ரைலர் என்றால் மெயின் படத்தைப் பார்க்க மக்கள் ஆவலாக உள்ளார்கள். ட்ரைலர்  ஓகே, அதே போல புதிய ஆட்சியின் செயல்பாடுகள் தொடருமானால் மெயின் பிக்சரும் ஓகே ஆகி விடும். மக்கள் அதற்காகத் தான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் மக்களைப் பொறுத்த வரை புதிய ஆட்சியின் செயல்பாடுகள் என்பது  சினிமா படமல்ல, அவர்களது வாழ்க்கை.