துவங்கியது ஆணி பட்டம் : வானிலையால்  விவசாயிகள் மகிழ்ச்சி

கோவையில் ஆணி பட்டம் சீசன் துவங்கி உள்ளதால், சின்ன வெங்காயம் நடவு பணியில், விவசாயிகள் தீவிரமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நடப்பாண்டு,ஆணி பட்டத்தை எதிர்நோக்கி, விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் முதல் வெப்ப சலனத்தால் மழை பெய்தது. ஈரப்பதம் கண்ட நிலம், உழுது தயார்படுத்தப்பட்டது.வெளி மாவட்டங்களில் இருந்து, விதை வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து மாதம்பட்டி,குப்பனூர், கரடிமடை உள்ளிட்ட கிராமங்களில், நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.அவ்வப்போது மழை பெய்வதால், குளிர்ந்த காற்று வீசுகிறது. இந்த சீதோஷ்ணம், சின்ன வெங்காயம் பயிர் வளர்வதற்கு ஏற்றது. இதனால், ஒரே சமயத்தில் பரவலாக நடவு துவங்கப்பட்டுள்ளது. அதே சமயம், விதை வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளதால், விலையும் ஏற்றம் கண்டு வருகிறது,” என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.