பிரசவித்த தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி

பிரசவித்த தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கோவை அரசு மருத்துவமனையில் இன்று (17.06.2021) துவங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது அதே நேரத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரசவித்த தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று முதல் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ பிரிவில் இன்று முதல் அரசின் அறிவுரைப்படி தடுப்பு செலுத்தப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்: கோவையில் ஜூன் மாதம் முதல் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவமனை நடைபெற்றுள்ளன. மார்ச் மாதம் முதல் 568 கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இங்கு சிகிச்சை பெற்று உள்ளனர். அவர்களில் 290 பேருக்கு இங்கு பிரசவம் நடைபெற்றுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்களில் சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று உள்ளனர். அவற்றுள் 42 தாய்மார்களுக்கு ஆக்சிஜன் துணையுடனும், 36 பேருக்கு சி.பி.ஏ.பி துணையுடனும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.