கே எம் சி எச்-ல் முதன்முறையாக கணையம் மற்றும் சிறுநீரகம் இரட்டை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை

நம் உடலில் ஏற்படும் நோய்க்கு காரணம் நாம் உண்ணும் உணவுப் பொருட்களே. இந்நிலையில், நம் உடல் நலம் சீராக செயல்பட இதயம், சிறுநீரகம், நுரையீரல், கணையம் ஆகிய உறுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகெங்கிலும் சிறுநீரகச் செயலிழப்புக்கு முதன்மையான காரணம் நீரிழிவு நோயாகும். சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோய்யாளிகளுக்கு டயாலிஸிஸ் சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. டயாலிஸிஸ் சிகிச்சையில், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், நீண்ட நாட்கள் உயிர்வாழ்வது என்பது அவர்களது உடல்நலம் பொறுத்தே அமைகிறது. சிறுநீரகம் செயலிழந்த நீரிழிவு நோயாளிகள் ஐந்து வருடத்தில்  40%  சதவீதம் பேர் இறப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் நீண்ட காலம் வாழ்வதற்கு காரணம் சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிப்பது ஆகும். அவர்களது வாழ்நாளை மேம்படுத்தும் ஒரே சிகிச்சை முறை சிறுநீரக  மாற்று அறுவை சிகிச்சைதான்.

மனித உடலின் நடுவயிற்றுப் பகுதியிலுள்ள கணையம் எனும் சுரபி உணவை செரிமானம் செய்யவும், ரத்ததிலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இந்தச் சுரபி போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாத நிலையையே நீரிழிவு நோய் என்கிறோம்.

அண்மையில், கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள வந்த சேலத்தைச் சேர்ந்த திரு. குமார் 29 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறவியில் இருந்தே   டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இதனால் முழு சிறுநீரகச் செயலிழப்பு, விழித்திரை பாதிப்பு, நரம்புமண்டலக் கோளாறு ஆகிய நோய்களாலும்  பாதிக்கப்பட்டிருந்தார். அவற்றிற்காக அவர் அதிக அளவு இன்சுலின் ஊசி மருந்தும், ஹீமோடயாலிஸிஸ் சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், கே.எம்.சி.ஹெச் மருத்துவக் குழு கணைய-சிறுநீரக இரட்டை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றே இவருக்குத் தீர்வு என்று அறிவுறுத்தினார்கள். இதற்கான உறுப்புகளை மூளைச் சாவு அடைந்த ஒருவரிடமிருந்து திரு. குமார் பெற்றார். சிறுநீரகம் மற்றும் கணையம் மாற்று அறுவை சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள்  டாக்டர் மங்கள குமார், மற்றும்  டாக்டர் விவேகானந்தன் ஆகிய இருவரும் கணைய-சிறுநீரக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை கே எம் சி ஹெச் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்து முடித்தார்கள். இதுபோன்ற சிகிச்சை இந்த பகுதியில் செய்வது இதுவே முதன் முறையாகும்.

இது குறித்து மருத்துவக்குழு கூறுகையில்: திரு. குமாரின் வாழ்வில் முதன்முறையாக ரத்த சர்க்கரையின் அளவு சரியாக இருந்தது. அவரது புதிய கணையம் செயல்படத் தொடங்கிவிட்டதால் அவர் இனி இன்சுலின் மருந்தை உடலில் செலுத்தவேண்டிய அவசியமில்லை. அவரது உடலில் போதிய இன்சுலின் சுரப்பதால் நீரிழிவு நோயிலிருந்து அவர் குணமாகிவிட்டார். இனி அதற்கான மருந்தோ, இன்சுலின் ஊசியோ அவர் எடுக்கவேண்டியதில்லை. அதோடு, இச்சிகிச்சை, நீரிழிவு நோயின் காரணமாக ஏற்படும் விழித்திரை நோய், நரம்புமண்டலக் கோளாறு, இரத்தக் குழாய் பாதிப்பு, இதய பாதிப்பு ஆகிய சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றும். உண்மையில், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சை முறை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. சர்க்கரை அளவு குறைவதை அறிய இயலாத நிலையிலுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு  கணைய மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே தீர்வாகும்.

ஒரே நேரத்தில் கணைய-சிறுநீரக இரட்டை உறுப்பு மாற்றுச் சிகிச்சை மேலை நாடுகளில் அதிகமாகச் செய்யப்படுகிறது. ஆனால், போதிய நிபுணத்துவமும், வசதிகளும் இல்லாத காரணத்தால் இந்தியாவில் இச்சிகிச்சை அளிக்கப்படுவது அரிதாக காணப்பட்டது.  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து  முதன்முறையாக இந்த அறுவைச் சிகிச்சை கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றி, அவரது வாழ்க்கைத் தரத்தை முற்றிலும் மேம்படுத்திய இந்த அரிதான சிகிச்சையை மேற்கொண்டதற்காக சிறுநீரக மருத்துவ ஆலோசகர் டாக்டர் மங்கள் குமார், கல்லீரல்-கணைய மாற்று அறுவைச் சிகிச்சை ஆலோசகர் டாக்டர் விவேகானந்தன், மற்றும் அவர்களது மருத்துவக் குழுவினை, கே எம் சி எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் பாராட்டினார். மேலும், உலகின் இந்தப் பகுதியில் சிக்கலான, சவாலான எந்தக் கடினமான சிகிச்சையையும் அளிக்கும் சிறந்த நிபுணத்துவமும், வசதிகளும் கே எம் சி ஹெச் மருத்துவமனையில் உள்ளது என்றும்  கூறினார்.