குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை ஜூனில் தொடங்கும்

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாடு அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கிய நிலையில், குழந்தைகள் மீதான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை ஜூன் மாதத்தில் தொடங்கப்படலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு தற்போது, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றின் 2 வது அலை இந்தியாவில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையைவிட அதிக உயிரிழப்பு ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கொரோனா 2 வது அலை குழந்தைகளையும் அதிகம் பாதிப்பதாக கூறப்படுவதால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இரண்டு முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனைகளை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாடு அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஜூன் மாதத்தில் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை தொடங்கக்கூடும் என கோவாக்சி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் டாக்டர் ரேச்ஸ் எல்லா தெரிவித்துள்ளர்.

காணொலி வாயிலாக நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்: கடந்த ஆண்டில் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திய நிலையில், தற்போது, தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 700 மில்லியன் தடுப்பூசியை தயாரிக்கும் அளவுக்கு உற்பத்தி திறனை உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு இன்னும் அங்கீகரிக்காத நிலையில், அதன் ஆங்கீகாரத்தை இந்த ஆண்டின் மூன்றாவது அல்லது நான்காவது காலண்டில் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தகவல்: News 18 Tamilnadu