முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை – முதல்வர் மு.க. ஸ்டாலின்

கொரோனா சங்கிலியை உடைப்பதற்கு முழு ஊரடங்கை தவிர வேறு வழியில்லை எனவும் கொரோனா தானாக பரவுவதில்லை மனிதர்கள் மூலமாகத்தான் பரவுகிறது, பரவலை ஏற்படுத்தும் மனிதர்களாக நம்மில் யாரும் இருக்கக்கூடாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த காணொளி பதிவில் அவர் பேசியுள்ளதாவது:

கொரோனாவை யாருக்கும் கொடுக்கவும் மாட்டேன், யாரிடம் இருந்தும் பெறவும் மாட்டேன் என பொதுமக்கள் உறுதி எடுக்க வேண்டும். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்க காரணம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் 35,000 க்கும் மேல் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மக்கள் அதிக அளவு வெளியில் நடமாடுவது தான்.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தொற்று சிறிது அளவு தான் குறைந்துள்ளதே தவிர தொற்று பரவல் கட்டுக்கள் வரவில்லை.

தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கின் மூலம் தான் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்து முடியும். இந்த கட்டுப்பாடு மிக தேவையான ஒன்று என அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு நமது நன்மைகத்தான் என்பதையும் மக்கள் உணர்ந்து அனைவரும் வீட்டினுள்ளே இருங்கள்.

மருத்துவ தேவைகளை தவிர பிற காரணங்களுக்காக வெளியில் வரவேண்டாம். முழு ஊரடங்கு என்பது கசப்பான மருந்து என்றாலும் மக்கள் அதை அருந்தியே ஆக வேண்டும். இந்த ஊரடங்கை பின்பற்றினால் பரவல் நிச்சயம் கட்டுக்குள் வந்துவிடும். பரவலுக்கான சங்கிலியை உடைத்து விட்டால் கொரோனாவை முற்றிலும் ஒழித்து விடலாம். என தெரிவித்துள்ளார்.