உருமாறிய கொரோனா கவலை அளிக்கிறது – உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் கவலை அளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெருந்தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிற்கு, பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது:

பி.1.617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்தியாவில் இந்த வைரஸ் பரவலின் வேகம் கவலையளிப்பதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் குறித்தும், வைரஸின் பரவல் தன்மை, இந்தியாவில் பரவி வருவது, மற்ற நாடுகளில் பரவல் சூழல் ஆகியவை குறித்து வைரஸ் பரிணாம பணி குழுவுடன் ஆலோசித்தோம். இந்த ஆலோசனை மற்றும் ஆய்வில், பி-1617 வகை வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட அதிகரித்துள்ளது.

பரவல் வேகம் அதிகரிக்கும் என்பது குறித்து முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, இன்னும் இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்து அதிகமான தகவல்கள் பெறுவது அவசியம் எனவும்
புதிது புதிதாக உருமாற்ற கொரோனா வைரஸ்கள் இன்னும் தொடர்ந்து வருமா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம் என குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி தொற்றைக் குறைத்து, உயிரிழப்பை தடுக்க வேண்டும். வைரஸ் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும். தனிமனிதர்கள் அளவில் சமூக விலகலைக் கடைபிடித்தல், கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டமான இடங்களைத் தவிர்த்தல் போன்றவை வைரஸ் பரவலைத் தடுக்கும் என தெரிவித்தார்.