டோனிக்கு பிறகு சி.எஸ்.கே.வின் அடுத்த கேப்டன்?

ஐபிஎல் 2021-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியுற்ற போதும், அதன் பின்னர் நடந்த அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. புள்ளி பட்டியலிலும் முதலிடம் வகித்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி, ஏற்கனவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல்-லிலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவார் என்ற கேள்விகள் அவ்வப்போது எழும்பிக்கொண்டு இருக்கின்றன. சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் 2022 ஆம் ஆண்டின் சிஎஸ்கே போட்டிகளிலும் தோனியே அணியை வழிநடத்துவார் என்பதை உறுதிப்படுத்திய போதிலும், தோனிக்குப் பிறகு யார் என்ற கேள்வி அவ்வப்போது கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரகயான் ஓஜா, அதிர்ச்சியூட்டும் ஒரு தகவளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தற்போது உள்ள கேன் வில்லியம்சன் பெயரை அவர் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியால் பயன்படுத்தப்படாமல் உள்ள கேன் வில்லியம்சன் தோனிக்குப் பிறகு அவருக்கு ஒரு சரியான மாற்றாக இருப்பார் என அவர் எண்ணுவதாகக் கூறியுள்ளார். தோனிக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாதான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என்ற ஊகம் உள்ள நிலையிலும், ஜடேஜா துணை கேப்டனாக இருப்பார் என்றே ஓஜா கருதுகிறார்.

“அவர் (ரவீந்திர ஜடேஜா) துணை கேப்டனாக இருக்கக்கூடும். அவர் எப்போது வேண்டுமானாலும் உதவியாக இருக்கக்கூடிய நல்ல வீரர். ஆனால், கேப்டனைப் பற்றி பேசினால், அதற்கான தகுதி படைத்தவர் ஒருவர்தான், கேன் வில்லியம்சன். அவரை சன்ரைசர்ஸ் அணி சரியாக பயன்படுத்தவில்லை. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ளது. எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாடுவார் என்றால், இந்த கேள்விக்கான இடமே இருக்காது. இருப்பினும், அவர் விளையாடவில்லை என்றால், கேன் வில்லியம்சன் சிஎஸ்கே அணிக்கு ஒரு நல்ல கேப்டனாக இருப்பார்.” என்று ஐபிஎல் கவர்னிங் குழு உறுப்பினரான ஓஜா, கிரிக்பஸ் வலைத்தளத்துடனான உரையாடலில் கூறினார்.