ரேஸ்கோர்ஸ் பசுமை பரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

மாநகராட்சி ஆணையர் உறுதி

ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பசுமை பரப்பு மேம்படுத்தப்படும் என்றும், மாநகராட்சி எந்த ஒரு மரத்தையும் வெட்டவில்லை என்றும் பொதுமக்களுடனான கலந்தாலோசனை கூட்டத்தில் மாநகரட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சிறுவர் விளையாட்டு பூங்காக்கள், வண்ண வண்ண விளக்குகள், நடைபயிற்சி மேற்கொள்ளவும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் தனி இடங்கள் என பன்னாட்டு தரத்தில் ரேஸ்கோர்ஸ் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் பசுமைப் பரப்பு குறைக்கப்படுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாகவும் சிலர் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து அப்பகுதி மக்களுடன்  மாநகராட்சி ஆணையர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது, ரேஸ்கோர்ஸ் பகுதியில் மரம் வெட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் மாநகராட்சி சார்பில் எந்த ஒரு மரமும் வெட்டப்படவில்லை. ஆர்.டி.ஓ அனுமதி இல்லாமல் ஒரு மரத்தையும் வெட்ட முடியாது.

அப்படி வேறு யாராவது மூலம் தவறுதலாக ஏதாவது ஒரு மரம் வெட்டப்பட்டு இருந்தாலும் அந்த மரத்திற்கு மாற்றாக குறைந்தது நான்கு முதல் ஐந்து மரங்கள் நடவு செய்யப்படும். பசுமை பரப்பு குறைக்கப்படமாட்டாது. பணிகளுக்காக தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக முடிவடைந்த உடன் முன்பு இருந்ததைவிட  பசுமைப் பரப்பு மேம்படுத்தப்படும்.

இனி மாநகராட்சி செயற்பொறியாளர் மாதந்தோறும் மக்களை சந்தித்து கருத்து கேட்பார். அதன்படி பணிகள் நடைபெறும்.  எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் எங்களிடம் தெரிவித்தால் ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும்  இல்லை என்றார்.