இலவசங்கள் ஒரு போதும் ஏழ்மையை ஒழிக்காது – கமல்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அத்தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளிலும் (28.3.2021) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பாரதிபார்க், காந்திபார்க், கிராஸ் கட் ரோடு என்று பல்வேறு முக்கிய இடங்களில், பிரச்சார வாகனத்தில் இருந்தபடி மக்களிடம் பேசினார்

கோவை டவுன்ஹால் பகுதியில் மக்கள் மத்தியில் பேசும்போது:

நாங்கள் மக்கள் ஆட்சியை அமைக்க வந்தவர்கள், மற்ற கட்சிகளை அகற்றுவது எங்கள் வேலை அல்ல என்றும், நீங்கள் சொல்வதை எல்லாம் செய்து காட்ட முடியுமா என்று என்னைக் கேட்கிறார்கள், நேர்மையாக செயல்படுவதன் மூலம் கொடுக்கும் வாக்குறுதிகளை சாதித்துக் காட்டுவேன் என்றும் கூறினார்.

நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வார்டிலும் எம்.எல்.ஏவின் அலுவலகம் அமைத்து உங்கள் குறைகளை எளிதில் அறிந்து நிவர்த்தி செய்வேன். மேலும், முறையாக சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பை கிடங்குகளுக்கு அருகே வாழும் மக்களின் நிலை மோசமானது மற்ற கட்சிகளுக்கு அது பற்றிய   கவலை சிறிதும் இல்லை. இந்த நிலையை, மாற்றவேண்டும், அந்த மாற்றம் நிகழ்வதற்கான  வாய்ப்பை எனக்கு அளியுங்கள், என்று கேட்டுக்கொண்டார்.

இதுவரை மற்ற கட்சிகள் வருடக்கணக்கில் செய்யாமல் இருந்ததை, நூறு நாட்களில் நான் செய்து காட்டுகிறேன். எனக்கு அரசியல் தொழில் அல்ல அது என் கடமை.   நீங்கள் என்னை தூக்கி நிறுத்த வேண்டாம், சிறிது ஆறுதல் கூறி ஊக்கம் கொடுத்தாலே போதும் நான் எனது கடமையை செய்து முடிப்பேன், என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இலவசங்கள் ஒரு போதும் ஏழ்மையை ஒழிக்காது, உழைப்பு மட்டுமே ஏழ்மையை போக்கக் கூடிய ஒரே வழி.   இப்பகுதியை சேர்ந்த சிலர்   இலவசங்கள் வேண்டாம் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் எங்கள் வாழ்வை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது எனது கடமையாகும். என்று கூறினார்.