மக்கள் நீதி மய்யத்திற்கு வானதி சீனிவாசன் பதில்

மக்கள் நீதி மய்யத்தின் விமர்சனத்திற்கு பதில் அளித்து வானதி சீனிவாசன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுடன், கமல்ஹாசன் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரா என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்  விடுத்திருந்த நிலையில், இதற்க்கு மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் குமரவேல் சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் கமல்ஹாசன் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  உடன் நேரடி விவாதத்துக்கு தயாராக உள்ளதாகவும், வானதி சீனிவாசன் போன்ற அரசியல்வாதிகளுடன் விவாதிக்க எங்களது மாணவர் அணியே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கைக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:    

கோயம்புத்தூரில்   ஒரு சிறு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் பயின்று வழக்கறிஞராக உள்ளதாகவும், தனக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், குடும்ப சுமைகளை கடந்து மக்கள் பணி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணான தன்னை பிரதமர் மோடியும் பாஜகவின் தேசியத் தலைமையும் தனக்கு தேசிய மகளிர் அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பையும், கோவை தெற்கில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியுள்ளனர்.

சாதாரண குடும்பத்தில் இருந்து வரக்கூடிய பெண்களுக்கு மக்கள் நீதி மய்யம் கொடுக்கும் மரியாதை இதுதானா? பொதுவாழ்வில் தடைகளைக் கடந்து வரும் பெண்களை இப்படித்தான் கேவலப் படுத்துவார்களா? என மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ள வானதி இப்படிப் பேசுபவர்கள் பெண்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் எனவும் இதற்கு கமலஹாசன் பதில் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.