கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் 

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று 18.03.2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளான காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, டாடாபாத் மற்றும் 100 அடி சாலையில்   உள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், சாலையோரக்கடைகள் ஆகிய கடைகளில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை  பின்பற்றுகின்றார்களா என ஆய்வு  மேற்கொண்டார்.

மேலும் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் முகக்கவசம் அணியாமல் கட்டுமானத்தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டதால் அதன் நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 100 அடி சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் முகக்கவசம் அணியாமல் இருந்த 4 நபர்களுக்கு  ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்வோர்களிடம்  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும்   கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு  தருமாறும் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் பொதுமக்களிடம் அறியுறுத்தினார்.