கதிர் கல்லூரியில் பத்மஸ்ரீ விருதாளர்களுக்கு பாராட்டு

கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் “மகுடம்” எனும் தலைப்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற விருதாளர்களுக்கு இன்று (17.3.2021) பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை தேக்கம்பட்டி இயற்கை விவசாயி பாப்பம்மாள் மற்றும் திருச்சி சமூக சேவகர் பத்மஸ்ரீ மா.சுப்புராமன் கலந்து கொண்டனர்.

இதில் இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்கள் பேசுகையில்,

இயற்கை வேளாண்மைதான் மண்ணையும் மனித வாழ்வையும் தழைக்க செய்யும். அந்த காலத்தில் ராகி, கம்பு, சோளம் என்று சிறுதானிய உணவுகளையே உண்டோம். 105 வயதிலும் நல் ஆரோக்கியமாக வாழ்கிறேன் என்றால் அதற்கு உணவும், காற்றுமே காரணம்.  மேலும் என் விவசாயத்தை பார்வையிட பல வெளிநாட்டு மனிதர்கள் வருகிறார்கள் அவை எனக்கு பெருமையாக உள்ளது. அதனால் இளைய தலைமுறைகள் விவசாயம் செய்ய வேண்டும் என்றார்.

அவரை தொடர்ந்து சமூக சேவகர் பத்மஸ்ரீ மா.சுப்புராமன் அவர்கள் கூறியதாவது,

மனித கழிவுகளை வீதிகளிலும் நீர் நிலைகளிலும் ஒட விடுவதால் பல நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன  என்றும்  அதனால் இல்லம் தோறும் மனித கழிவுகளை உரமாக மாற்றும் நவீன கழிப்பறைகள் வேண்டும்  என்றும் கூறினார்.

மேலும் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மூலமாக பல சுகாதார கேடுகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நாப்கின் எரியுட்டு மையத்தை நிறுவியுள்ளோம். அதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே ஸ்கோப், இதன் மூலமாக 1 லட்சம் கழிவறைகள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாப்கின் மையங்களை உருவாக்கி உள்ளோம் எனவும்  மனிதனின் அடிப்படை உணவு, உடை, இருப்பிடம் போல கழிவறையும் அமைதல் வேண்டும் என்றும் கூறினார் .

இவ்விழாவில் கதிர் கல்விக் குழுமத் தலைவர் கதிர், கல்லூரியின் செயலாளர் லாவண்யா கதிர், கல்லூரியின் முதல்வர் கற்பகம், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்